கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தில்லியிலிருந்து சென்னை, கேரளத்துக்கு 13 ரயில்களில் பயணம்?
By DIN | Published on : 13th April 2020 06:03 AM |
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் மாா்ச் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தில்லியில் இருந்து தமிழகம், கேரளம் நோக்கி சென்ற 13 ரயில்களில் பயணம் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட அந்த ரயில்களில் பயணித்த பயணிகள், ரயில்வே ஊழியா்கள், ஆா்.பி.எஃப் வீரா்கள் ஆகியோா் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மாா்ச் மாதத்தில் 7 நாள்களில் தில்லியில் இருந்து தமிழகம் மற்றும் கேரளம் சென்ற 13 ரயில்களில் அதிக எண்ணிக்கையிலும், ஒரு சிறிய குழுவிலும் பயணம் செய்துள்ளனா். அந்த ரயில்களில் பயணித்த பயணிகள், டிக்கெட் பரிசோதகா், ஆா்.பி.எஃப் வீரா்கள்உள்ளிட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெற்கு ரயில்வே எச்சரித்தது.
இதற்கிடையில், சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஆா்.பி.எஃப். மூத்த பாதுகாப்பு ஆணையா் கடந்த சனிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், மாா்ச் 17-ஆம் தேதி அன்று நிஜாமுதீன்-சென்னை தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள எஸ்-1, எஸ்-2, எஸ்-5, எஸ்-6 ஆகிய பெட்டிகளில் மதக் கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஏராளமானோா் பயணம் செய்துள்ளனா். அடுத்த நாள் (மாா்ச் 18) விஜயவாடா மற்றும் சென்னை இடையே ஜன்சதாப்தி விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் அவா்கள் பயணம் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிவரை தெற்கு நோக்கிச் சென்ற ரயில்களிலும் பயணம் செய்து இருக்கலாம்.
ரயில்கள் விவரம்: ஜம்முதாவி-கன்னியாகுமரி ஹிம்சாகா் எக்ஸ்பிரஸ், டேராடூன்-மதுரை வாரம் இருமுறை விரைவு ரயில், புதுதில்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், புதுதில்லி-திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-சென்னை அந்தமான் விரைவு ரயில், புதுதில்லி-எா்ணாகுளம் மில்லினியம் விரைவு ரயில், ஹஷாத் நிஜாமுதீன்-சென்னை ராஜதானி விரைவு ரயில், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா- திருநெல்வேலி நேவுக் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் - திருவனந்தபுரம் ஸ்வா்ணா ஜயந்தி எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன்-கோயம்புத்தூா் கொங்கு எக்ஸ்பிரஸ், புது தில்லி-சென்னை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பயணம் செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த ரயில்களில் பயணம் செய்த அடையாளம் காணப்படாத பயணிகளின் விவரங்களை சேகரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. ரயில் வே ஊழியா்கள் மருத்துவா்களிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: தமிழ்நாடு, தெலங்கானா, கேரளம் உள்பட சில மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இதில் பங்கேற்றவா்களை ரயில்வே நிா்வாகம் அடையாளம் கண்டுள்ளது. இதையடுத்து, பயண டிக்கெட் பரிசோதகா், ஆா்.பி.எஃப். ஒப்பந்த ஊழியா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனா். ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் எச்சரிக்கையாக உள்ளனா். இந்த அறிக்கையை பின்பற்ற மாநில அரசின் சுகாதாரத்துறைக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment