பிரதமர் நிவாரண நிதிக்கு எதிரான மனு :உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Updated : ஏப் 13, 2020 06:35 | Added : ஏப் 13, 2020 06:34 |
புதுடில்லி : 'கொரோனா' நிவாரண நிதிக்கு, நன்கொடை வழங்கக்கோரி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை, இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நன்கொடை வழங்க முன்வருமாறு, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம், கடந்த, 28ம் தேதி, கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், மக்கள் என பல தரப்பினரும், நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கக்கோரி பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா தாக்கல் செய்த அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்குமாறு, இந்திய பிரதமர், மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்காக, தனி கணக்கும் தொடங்கப்பட்டது. எனினும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்படவில்லை.
ஆகையால், இதுவரை நன்கொடையாக வந்துள்ள நிதியை, இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். மேலும், இந்த பிரதமரின் நிவாரண நிதி அமைக்கப்பட்டது குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எம்.எம்.சந்தானகவுடர் அடங்கிய அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் இன்று விசாரிக்க உள்ளது.
No comments:
Post a Comment