Monday, June 22, 2020

ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் இன்று முதல் ரூ. 1000 வழங்கல்

ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் இன்று முதல் ரூ. 1000 வழங்கல்

Added : ஜூன் 21, 2020 22:33

சென்னை; முழு ஊரடங்கு அமலாகியுள்ள பகுதிகளில் வசிக்கும், ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று, 1,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கும் பணி, இன்று துவங்குகிறது.

தமிழகத்தில், மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், ஏப்ரலில், 2.01 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதில், 2.50 லட்சம் கார்டுதாரர்கள் நிவாரண தொகை வாங்கவில்லை. மே மற்றும் இம்மாதம், அனைத்து கார்டுதாரர்களுக்கும், அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகரில், தொற்று பரவல் அதிகம் உள்ளது.

அதனால், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில பகுதிகளில், இம்மாதம், 19ம் தேதி முதல் வரும், 30ம் தேதி வரை, தமிழக அரசு, முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் வசிக்கும், 21.83 லட்சம் அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் வழங்கினால், கார்டுதாரர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் ஊழியர்கள் இன்று முதல் நிவாரண தொகையை வழங்க உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடும் தயாராக உள்ளது. இன்று துவங்கி, வரும், 26ம் தேதி வரை, காலை, 8:00 முதல் மாலை, 6:00 மணி வரை நிவாரணம் வழங்கப்படும். இதனால், முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளுக்கு, 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை விடுமுறை.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025