Thursday, June 25, 2020

போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை -சென்னையில் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது

போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை -சென்னையில் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேர் அதிரடி கைது

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 25, 2020 04:30 AM
சென்னை, 

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தாக்குதலையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் செல்வதற்கு அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தால் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு காரியங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் துணையோடு போலியாக தயாரித்து ஒரு கும்பல் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்தன.

‘இ-பாஸ்’ தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை அண்ணாசாலையை சேர்ந்த துரைராஜ் (வயது 29) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், போலி ஆவணங்கள் மூலம் சிலர் இ-பாஸ் தயாரித்து பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ‘சைபர் க்ரைம்’ இன்ஸ்பெக்டர் துரை, ‘தொற்று நோய் தடுப்பு’ சட்டப்பிரிவு 269 மற்றும் ‘பேரிடர் மேலாண்மை’ சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

போலி இ-பாஸ் தயாரிப்பு வழக்கில் சென்னை பேசின்பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கோபி (35), மனோஜ்(30), வினோத்(37) ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024