'வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்கள்
Added : ஜூன் 24, 2020 23:13
சென்ன; 'வெளிநாடுகளில் சிக்கியுள்ள, 26 ஆயிரம் தமிழர்கள், படிப்படியாக அழைத்து வரப்படுவர். இதுவரை, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தி.மு.க., செய்தி தொடர்பாளரான, டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனு:மலேஷியா, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். விமான போக்குவரத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்துக்கு விமானங்கள் வர, தமிழக அரசு தடை விதித்துள்ளது.வெளிநாடுகளில் தவிப்பவர்களை, இங்கு அழைத்து வர வேண்டியது, அரசின் கடமை.
எனவே, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.'தமிழகம் திரும்ப விண்ணப்பித்துள்ள அனைவரும் எப்போது அழைத்து வரப்படுவர்; அதற்கான காலவரம்பு என்ன; 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், கூடுதல் விமானங்கள் இயக்கம் குறித்த திட்டம் என்ன' என்பதற்கு, மத்திய அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு, 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 26 ஆயிரம் தமிழர்கள், படிப்படியாக அழைத்து வரப்படுவர். அதற்கான விமானங்கள் இயக்கப்படும்' என்றார்.
இவ்வழக்கில், வெளியுறவு துறை துணைச் செயலர் வினேஷ்குமார் கைரா தாக்கல் செய்த பதில் மனு:வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர, 4.87 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 2.63 லட்சம் பேர், இந்தியா அழைத்து வரப்பட்டனர். தமிழகத்துக்கு வர, 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 17 ஆயிரத்து, 701 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வர, மூன்று கட்டங்களாக, விமானங்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment