தவணை முறையில் கல்வி கட்டணம்: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு
Updated : டிச 06, 2020 05:21 | Added : டிச 06, 2020 05:19
சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரியின், கல்வி கட்டணத்தை குறைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தவணை முறையில் கட்டணத்தை செலுத்த, மாணவர்களை அனுமதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மாணவர்களின் பெற்றோர், எம்.ஷேக் தாவூத் உள்ளிட்ட, எட்டு பேர் தாக்கல் செய்த மனு: ஊரடங்கு உத்தரவால், ஆறு மாதங்களாக வகுப்புகள் நடக்கவில்லை. இரண்டு மணி நேரம், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கிறது. இதனால், மாணவர்களுக்கு பலன் எதுவும் இல்லை. ஆண்டு கட்டணமாக, 22.50 லட்சம் ரூபாய் செலுத்தினாலும், இந்த கல்வியாண்டில், 50 சதவீதம் கூட வகுப்புகள் நடக்கவில்லை. கல்வி கட்டணத்தை குறைக்கவும், விடுதி கட்டணத்தில், 50 சதவீதத்தை, வரும் ஆண்டில் சரி செய்து கொள்ளவும் கோரியுள்ளோம். நிகர்நிலை பல்கலைகள் அனைத்துக்கும், ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்கவும், இந்த ஆண்டில், 40 சதவீத கட்டணத்தை குறைத்து, மீதி, 60 சதவீதத்தை, இரண்டு தவணைகளில் பெறும்படியும் கோரியுள்ளோம். எனவே, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை நிர்ணயிக்கும்படி, மத்திய அரசு, யு.ஜி.சி., மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மாணவர்களும், இதுபோன்று மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:வகுப்புகள் நேரடியாக நடக்கவில்லை என்றாலும், பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.வழக்கின் தன்மை சூழ்நிலையை பரிசீலிக்கும் போது, கல்வி கட்டணத்தை, 22.50 லட்சத்தில் இருந்து குறைத்து உத்தரவிட, எந்த முகாந்திரமும் இல்லை. அசாதாரண சூழ்நிலை இருந்தாலும், நீதிமன்றம் எல்லையை மீற முடியும் என்ற, அர்த்தம் இல்லை. அதனால், கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. தவணை முறையில் கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம். நீட்டிக்கப்படாதுமுதல் தவணையாக, 40 சதவீதம்; இரண்டாவதாக, 30 சதவீதம்; மூன்றாவதாக, 30 சதவீதம் என, வசூலித்துக் கொள்ளலாம்.
முழு கட்டணத்தையும் செலுத்த முடியும் என்பவர்கள், டிச., 31க்குள் செலுத்த வேண்டும். முதல் தவணையை, வரும், 15; இரண்டாவது தவணையை, ஜன., 4; மீதி தொகையை, பிப்., 8க்குள் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த வழங்கப்பட்டுள்ள அவகாசம், இதற்கு மேல் நீட்டிக்கப்படாது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment