Thursday, April 1, 2021

முதுமையில் தனிமை கொடுமை... தோள் கொடுக்க தேவை தோழமை! தள்ளாத வயதில் தக்க துணை தேடுவதில் தவறில்லை

முதுமையில் தனிமை கொடுமை... தோள் கொடுக்க தேவை தோழமை! தள்ளாத வயதில் தக்க துணை தேடுவதில் தவறில்லை

Added : ஏப் 01, 2021 02:12

கொடிது, கொடிது வறுமை கொடிது. அதிலும், கொடிது முதுமையில் தனிமை. முதுமையை வெல்ல ஒரு துணை அவசியம். முதியவர்கள் தோழமைக்காக, இரண்டாவது முறை திருமணம் செய்யலாம் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்படுகிறது.

'நமது நாட்டில் மூத்த குடிமக்கள் மத்தியில், மனச்சோர்வுக்கு தனிமைதான் முக்கிய காரணம்' என, 'கிராமப்புற நடைமுறையில் நரம்பியல்' என்ற தலைப்பில் நடந்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில், 22 சதவீத முதியவர்கள் அல்லது ஐந்து பேருக்கு ஒருவர் மனச்சோர்வுடன் காணப்படுகின்றனர். மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் நிலையில் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகுந்த அவசியம்.

மத்திய புள்ளிவிபரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைப்பின் தகவல் படி, '2050 ஆண்டு வாக்கில், முதியவர் மக்கள் தொகையில் கால் பகுதியாக இருப்பர். மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். பலரும் 80 வயது கடந்தவர்களாக இருப்பர்' என தெரிவிக்கப் பட்டு உள்ளது.தனிமையில் வேதனைவாழ்க்கை துணையின் மறைவைத் தொடர்ந்து, வயதானவர்கள் இடையே மறுமணம் செய்வது குறித்து பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், சமுதாயத்தை எதிர்கொள்ளத் தயங்கி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் பலர் மறுமணத்துக்கு முன்வருவதில்லை.'ஹெல்பேஜ் இந்தியா' கருத்துப்படி, 'ஒவ்வொரு, 1,000 முதியவர்களில், கிராமப்புறங்களில் நான்கு பேரும், நகர்ப்புறங்களில் 55 பேரும் காது கேளாமை, பார்வை குறைபாடு அல்லது எழுந்து நடக்க முடியாதவர்களாக இருப்பர்' என தெரிய வந்துள்ளது. வயதான காலத்தில் தனிமை, பதற்றம் மற்றும் மனச்சோர்வு உருவாகும். வாழ்க்கைத் துணை ஒருவர் இறக்கும்போது, இது தீவிரமடைகிறது.

அதனால், வயதான காலத்தில் ஏற்படும் தனிமையின் வேதனையை கையாள ஜப்பானில் உள்ளதைப் போலவே, ஒரு அமைச்சரும், அமைச்சகமும் தேவைப்படுமோ என்ற கேள்வி எழுகிறது.

'ஹெல்ப்லைன் அவசியம்'

'கோவை கேர்' ஓய்வு இல்லங்களின் நிர்வாக இயக்குனர் கர்னல் ஸ்ரீதரன் கூறியதாவது: இந்தியாவில், 13 கோடி முதியவர்களுக்கு உடல் நலத்தைப் பாதுகாக்க அதிக பட்ஜெட் ஒதுக்கப் பட வேண்டும். தனிமை, முதுமை மற்றும் 'அல்சைமர்' போன்ற பிரச்னைகள் உள்ள, 13 லட்சம் முதியவர்கள் உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை. பொதுவாக, ஒருவருக்கு மனைவி இறந்த பின், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. தனியாக வசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.

தோழமை மற்றும் பேச்சுத் துணையின்றி பல முதியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளவும் துணிகின்றனர். இதைக் கையாள வயதானவர்களுக்கான ஒரு ஹெல்ப்லைன் அவசியம். தோழமை என்பது எதிர் பாலினத்தவராகத்தான் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு செவிலியர் தான் கவனித்துக் கொள்பவருக்கு ஒரு நல்ல தோழராக இருக்கலாம். பொழுது போக்குகளை வளர்ப்பது, இசையைக் கேட்பது, ஆன்மிகத்தில் ஈடுபடுவது மற்றும் மந்திரம் சொல்லுதல் போன்றவை முதுமையில் மிகவும் நல்லது.

பல வயதான தம்பதியினர் பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளை தோழமைக்காக வளர்ப்பதைக் காணலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஒளிரும் நம்பிக்கை

'எல்டர் கேர்' நிறுவனத்தின் டாக்டர் ராகுல் பத்மநாபன் கூறியதாவது:ஒரு நபருக்கு வயதாகும் போது மன அழுத்தம், தோல்வி, அன்புக்குரியவர்களின் மரணம் அல்லது தனிமை ஆகியவற்றைக் கையாள்வதற்கான திறமைகள் குறைகின்றன. அவர்களின் புலன்களும் சமயத்தில் பழுதானால், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையையே இழக்கின்றனர். ஏற்கனவே இருக்கும் நோயின் விளைவு, தனிமை காரணமாக மோசமடைகிறது.

கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு, அக்கம் பக்கத்தில் இருந்தே அதிக சமூக ஆதரவு இருக்கும். நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு ஆதரவு குறைவாகவே உள்ளது. வயதான காலத்தில் தோழமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். மேலும், முதியவர்களின் குழந்தைகளும் முற்போக்கானவர்களாக, முட்டுக்கட்டை போடாதவர்களாக இருக்க வேண்டும்.

திருமண இணையதளங்கள் இன்று மூத்த குடிமக்களின் சுயவிபரங்களை சேர்க்கத் துவங்கியுள்ளன. இவை இரண்டாவதுதிருமணங்களை ஊக்குவிக்க உதவுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அதிகளவில் பதிவு செய்ய முன்வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024