Thursday, April 1, 2021

வேலை கிடைத்த பின் தாயை தவிக்க விட்டார்

வேலை கிடைத்த பின் தாயை தவிக்க விட்டார்

Added : ஏப் 01, 2021 02:08

சென்னை:கருணை அடிப்படையில் வேலை பெற்ற பின், தாயாரை நிர்கதியாக விட்ட மகனின் சம்பளத்தில் இருந்து, 25 சதவீதம் பிடித்தம் செய்யும்படி, கல்வித்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை; தலைமை ஆசிரியராக பணியாற்றினார். 1998ல், பணியில் இருக்கும்போது இறந்தார். திருமலை - வள்ளியம்மாள் தம்பதிக்கு, இரண்டு மகன்; இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்பத்தை கவனித்து கொள்வதாக, மகன் தேசிங்குராஜா உறுதி அளித்ததை தொடர்ந்து, கருணை வேலையை மற்றவர்கள் விட்டு கொடுத்தனர்.

தேவனுாரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், 2013ல் எழுத்தர் வேலை தேசிங்குராஜாவுக்கு கிடைத்தது.வேலை கிடைத்த பின், நிர்கதியாக விட்டு விட்டதாகவும், தாக்கியதாகவும், மோசமாக திட்டியதாகவும், மகன் தேசிங்குராஜாவுக்கு எதிராக, வள்ளியம்மாள் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மகனின் தொடர் துன்புறுத்தலால், உயர் நீதிமன்றத்தில் வள்ளியம்மாள் வழக்கு தொடுத்தார்.

தேசிங்கு ராஜாவுக்கு எதிராக துறை நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை, 'சஸ்பெண்ட்' செய்யவும், மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:கருணை வேலைக்கு, தேசிங்குராஜாவின் சகோதரிக்கு முழுமையான தகுதி இருந்தும், குடும்பத்தை கவனித்துக் கொள்வார் எனக் கருதி, விட்டு கொடுத்துள்ளார். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய, உத்தரவிட முடியாது. முழுமையான விசாரணை முடிந்த பின், அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.ஏற்கனவே, உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த வழக்கிலும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

தேசிங்குராஜாவின் சம்பளத்தில், 25 சதவீதம் பிடித்தம் செய்து, மனுதாரருக்கு மாதம் தோறும் செலுத்தப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.மனுவுக்கு, கல்வித்துறை பதில் அளிக்க வேண்டும். விசாரணை, ஜூன், 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024