Saturday, April 3, 2021

விதிகளின்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் தேசிய மருத்துவ கமிஷன் ஆய்வுக்கு உத்தரவு

விதிகளின்படி மருத்துவக் கல்லுாரி கட்டடம் தேசிய மருத்துவ கமிஷன் ஆய்வுக்கு உத்தரவு

Added : ஏப் 02, 2021 23:41

சென்னை:தமிழகத்தில், புதிதாக கட்டப்படும், 11 மருத்துவக் கல்லுாரிகள், விதிகளின்படி கட்டப்படுகிறதா என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்யும்படி, தேசிய மருத்துவ கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுதும், 75 மருத்துவக் கல்லுாரிகளை கட்ட, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு, 11 கல்லுாரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்டப்பட வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடுத்தார்.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பழைய விதிகளின்படி கட்டம் கட்டும்படி, மனுதாரர் கோரியுள்ளார். 2018 - 2020ம் ஆண்டுகளில் புதிய விதிகள் வந்து விட்டன. புதிய விதிகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது' என்றார்.

இதையடுத்து, 'எந்த குறுக்கீடும் இன்றி, திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம்; தேசிய மருத்துவ கமிஷனின் விதிகளுக்கு உட்பட்டு, மருத்துவக் கல்லுாரி கட்டடங்கள் கட்டப்படுகிறதா என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024