Tuesday, May 4, 2021

நர்ஸ் மகளுக்கு கருணை பணி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

நர்ஸ் மகளுக்கு கருணை பணி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : மே 04, 2021 00:37

மதுரை:அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் கொலை செய்யப்பட்டதால், ஆதரவற்ற நிலையில் உள்ள மகள், கருணைப் பணி நியமனம் கோரியதில், தமிழக அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸாக பணிபுரிந்தவர் முருகேஸ்வரி. இவரை, 2006ல் அவரது கணவர் கொலை செய்து, ஆயுள் கைதியாக சிறையில் உள்ளார்.கருணைப் பணி நியமனம் கோரி, முருகேஸ்வரியின் மகள் கீதாஞ்சலி, தமிழக அரசுக்கு விண்ணப்பித்தார். பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, கீதாஞ்சலி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.சுகாதாரத் துறை தரப்பு, 'மனுதாரரின் தாய் இறந்த மூன்று ஆண்டுகளுக்கு பின், பணிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல' என தெரிவித்தது.

மனுதாரர் தரப்பு, 'இதை விசித்திரமான வழக்காக கருதி, பரிசீலிக்க வேண்டும். மனுதாரரை விட்டு, அவரது சகோதரர் வெளியேறி விட்டார். எங்கு உள்ளார் என தெரியவில்லை' என தெரிவித்தது.நீதிபதிகள் உத்தரவு:தாய் இறந்தபோது, மனுதாரருக்கு வயது 11. அவர் பணிக் குரிய வயதை, 2013ல் அடைந்துள்ளார். மனுதாரர், அவரது சகோதரர் ஆகியோர் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர் மீண்டும் ஆவணங்களுடன், அரசிடம் மனு அளிக்க வேண்டும். அதை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கக இயக்குனர், தகுதி அடிப்படையில் பரிசீலித்து, இரண்டு மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024