Tuesday, May 4, 2021

ரூ. 4,000 கொரோனா நிவாரணம் கேட்டு ரேஷன் கடைகளுக்கு படையெடுப்பு

ரூ. 4,000 கொரோனா நிவாரணம் கேட்டு ரேஷன் கடைகளுக்கு படையெடுப்பு

Added : மே 03, 2021 23:07

சென்னை:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 4,000 ரூபாய் கொரோனா நிவாரண தொகையை கேட்டு, கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, 2020 மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வராக இருந்த இ.பி.எஸ்., உத்தரவில், அந்த ஆண்டு ஏப்ரலில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு தடுப்பு கால நிவாரணமாக, தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த, அரிசி கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக, 4,000 ரூபாய் வழங்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க.,வினர், வாக்காளர்களை கவர, நிவாரண தொகை வழங்குவதாக கூறி, தாங்களே அச்சிட்ட, 'டோக்கன்'களை வழங்கினர். ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே, அந்த டோக்கனை ரேஷன் கடைகளுக்கு எடுத்து சென்று, கார்டுதாரர்கள், நிவாரண தொகை கேட்டனர்.அவர்களிடம், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் நிவாரண தொகை கிடைக்கும்; தற்போது கிடையாது' எனக்கூறி, ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.

ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, நேற்று ரேஷன் கடைகளுக்கு சென்று, கார்டுதாரர்கள், 4,000 ரூபாய் நிவாரணம் வழங்குமாறு கேட்டனர்.இது குறித்து, கடை ஊழியர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளுக்கு வந்த கார்டுதாரர்கள், 4,000 ரூபாய் கொரோனா நிவாரண தொகை வழங்குமாறு கேட்டனர்.'ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் எனக்கூறி, அவர்களை திருப்பி அனுப்பினோம்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024