Tuesday, May 4, 2021

கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

Updated : மே 04, 2021 07:21 | Added : மே 04, 2021 07:20

புதுடில்லி: 'கொரோனா தொற்றை தடுக்கும் மருத்துவப் பணிகளில், 100 நாட்கள் வரையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, வருங்காலங்களில், அரசு பணி வேலைவாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்றை எதிர்த்து, நாடு முழுவதும் நடந்து வரும் போரில், ஏராளமான மருத்துவ பணியாளர்கள், தங்களை அர்ப்பணித்து, உறுதியுடன் போராடி வருகின்றனர்.

அங்கீகாரம்

இவர்களுக்கு ஊக்கமளிக்கவும், இப்பணிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையையும், போதுமான அளவில் உறுதிப்படுத்தும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, சில முக்கிய நடவடிக்கை களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.இதன்படி, முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, அடுத்த நான்கு மாதங்களுக்காவது ஒத்திவைக்கப்படும். தேர்வு தேதிக்கு முன்பாக, ஒரு மாதம் அவகாசம் அளித்து, புதிய அறிவிப்பு வெளியாகும்.

கொரோனா தொற்றை தடுக்கும் பணிகளில், மருத்துவ பணியாளர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், தொடர்ந்து, 100 நாட்கள் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு, எதிர்காலத்தில், அரசு பணி வேலை வாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்.படிப்பு முடித்து பயிற்சி யில் உள்ள மாணவர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

துறைத்தலைவர்கள், பேராசிரியர்களின் கீழ், அவர்களது வழிகாட்டுதலின்படி, மருத்துவ பணிகளில் இறங்கலாம்.இறுதி ஆண்டு படிக்கும், எம்.பி.பி.எஸ்., மருத்துவ மாணவர்களையும், மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தலாம்.பி.எஸ்.சி., நர்சிங் படித்து, உரிய தகுதிகளுடன் இருக்கும் நர்சுகளை, கொரோனா தொற்று வார்டுகளில், மூத்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, பணிகளில் ஈடுபடுத்தலாம்.

விருது

தொடர்ந்து, 100 நாட்கள் கொரோனோ தடுப்பு மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவ பணியாளர்களின் மதிப்புமிகு சேவையை பாராட்டி, கவுரவிக்கும் வகையில், பிரதமர் சார்பில், தேசிய விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின் காரணமாக, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் ஆக., 31 க்கு முன் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024