Tuesday, July 20, 2021

மருத்துவ படிப்புகளில் 69% இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்


மருத்துவ படிப்புகளில் 69% இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

2021-07-20@ 00:11:30

சென்னை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரை அளித்தது.ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை ஒன்றிய அரசு அமல்படுத்த மறுக்கிறது. நீதிமன்றத்தில் 2021-22ம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு உறுதியளித்தும் அதை அமல்படுத்தவில்லை.

இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று வாதிட்டார்.ஒன்றிய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் ஒன்றிய அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர், 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டு தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்க தயாராக இருக்கிறோம். எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் பி.முத்துக்குமார் ஆஜராகி, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதே அரசின் முடிவு என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் 2020ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியது.இதுகுறித்த நிலைபாட்டை ஒன்றிய அரசு அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...