'அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!'
Updated : ஜூலை 27, 2021 04:04 | Added : ஜூலை 27, 2021 04:01
'தமிழ் இளைஞர்கள் வேலைக்கே வர மாட்டேன் என்கின்றனர்; வட மாநில இளைஞர்களை அழைத்து வந்தே, பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த வேண்டியிருக்கிறது' என, திருப்பூரைச் சேர்ந்த, 'கிளாசிக் போலோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவராமன் மனம் நொந்து பேசிய காணொலி, பரபரவென பரவி வருகிறது. அதேசமயம், அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, 'பீஹாரிகளுக்கு மூளை குறைவு' என்று தெரிவித்திருப்பது, ஆச்சரியத்தை அளித்து இருக்கிறது.
'மேன்பவர் சப்ளையர்'
ஒருபக்கம், வேலைகளை செய்வதற்கு, தமிழ் இளைஞர்கள் தயாரில்லை என்ற நிலையில், வட மாநில இளைஞர்களை குறை சொல்வது என்ன நியாயம்; அவர்களும் இல்லையெனில், இங்கே தொழில்கள் திண்டாடிப் போகாதா என்று கேட்கின்றனர், பல்வேறு தொழிலக முதலாளிகள்.இதில் உண்மை நிலை என்ன என்பதை, தொழில் துறை ஆலோசகர் ஆர்.நரசிம்மன், நம்நாளிதழுக்கு அளித்த பேட்டி: 'கிளாசிக் போலோ' எம்.டி., சொன்னது, நுாற்றுக்கு நுாறு உண்மை. நானும் 1௦ ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து வருகிறேன்.
கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் பீஹார் மற்றும் வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். 'கிளப்' ஒன்றில் பணியாற்றிய வடமாநில நபரிடம், ஒரு முதலாளி ஆட்கள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். தன்னுடைய கிராமத்தில் இருந்து 10, 20 என்று இளைஞர்களை, திருப்பூருக்கு வரவழைத்தார். ஒரு கட்டத்துக்குப் பின், அங்கே கல்யாண மண்டபம் ஒன்றை வாடகைக்கு பிடித்து, அதில் ஆட்களை தங்க வைத்து உணவு கொடுத்து, பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை 'சப்ளை' செய்யத் துவங்கி விட்டார்.
இன்று தொழிலகங்களின் தேவைக்கேற்ப 100, 200 ஆட்களைக் கூட, அவரால் வழங்க முடியும். மிக வெற்றிகரமான 'மேன்பவர் சப்ளையர்' ஆகி விட்டார், அந்த முன்னாள் கிளப் ஊழியர். மிகவும் சிரமமான துறைகளில் கூட, வட மாநில தொழிலாளர்கள் வந்து விட்டனர்.
உழைப்பு அதிகம்
உதாரணமாக, ரசாயன ஆலைகள், கட்டுமான துறை, சாயத் தொழில் போன்ற இடங்களில், உதவியாளர்களாக வந்து சேருவர். படிப்படியாக தொழிலை கற்று முன்னேறி விடுவர். இன்று, திருப்பூர் பகுதியில், பலர் சொந்தமாகவே சிறு சிறு யூனிட்களை அமைத்து, தொழில்முனைவோராக மாறியுள்ளனர். அவர்களுடைய உழைப்பு மிக அதிகம்; உற்பத்தி திறன் மிக அதிகம்; ஈடுபாடும் மிக அதிகம்; கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பு, மிக மிக அதிகம்.
வெறுமனே சுத்தப்படுத்தும் வேலையை கொடுத்தாலும் கூட, மூலை முடுக்கெல்லாம் சுத்தப்படுத்தி, அவ்வளவு நேர்த்தியாக பணியாற்றுவர். தமிழ் இளைஞர்கள் நிலைமையே வேறாக இருக்கிறது. பல்வேறு புதிய தொழில்கள், தமிழகத்துக்கு வரப் போவதை யூகித்த, தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் ஒன்று, ஒரு தொழிற் பயிற்சி பள்ளியை துவங்கியது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு என்றே, ஐ.ஐ.எம்., ஆமாதாபாதில் இருந்து, இரண்டு இளைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
உத்தரவாதம்
கிராமம் கிராமமாக போய், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களை தேடித் தேடி, இந்தத் தொழிற்பயிற்சி வகுப்பில், 100க்கு மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்தனர். உணவு, உறைவிடம் இலவசம் என்பதோடு, அவர்களுக்கு மாதாமாதம் உதவித்தொகையும் வழங்க உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
ஆச்சரியம்
வகுப்பு ஆரம்பித்த போது, வந்து சேர்ந்தது வெறும், 20 மாணவர்கள் தான். வீட்டுக்கு பக்கத்திலேயே வேலை கிடைத்தால் போதும் என்று, தமிழக இளைஞர்கள் நினைக்கின்றனர்.ஊரை விட்டு நகர மாட்டேன் என்கின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு, ரொம்ப அதிகமாகஇருக்கிறது. அதை நிறைவேற்றும் அளவுக்கு, நமது தொழில் துறை இல்லை. இதைப் பார்க்கும் போது, கே.என்.நேரு, எப்படி வட மாநில இளைஞர்களை பற்றி, அப்படியொரு விமர்சனம்செய்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் இனி ஒரு வேலை நடக்காது.இவ்வாறு நரசிம்மன் கூறினார்.
- நமது நிருபர்- -
No comments:
Post a Comment