டாக்டர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு
Added : ஜூலை 31, 2021 01:00
சென்னை:அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
சந்திப்பு குறித்து, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். ''அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலர் ரவீந்திரநாத் கூறுகையில், ''அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை கல்வியில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ''தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்தினோம்,'' என்றார்.
No comments:
Post a Comment