Saturday, July 31, 2021

15 நாட்களுக்குப் பிறகு 10,500 டோஸ் வரத்து; கோவாக்சின் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்: 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேரிட்டதால் பாதிப்பு


15 நாட்களுக்குப் பிறகு 10,500 டோஸ் வரத்து; கோவாக்சின் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்: 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேரிட்டதால் பாதிப்பு

30.07.2021 


திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு 15 நாட்களுக்குப் பின் நேற்று கோவாக்சின் தடுப்பூசி 10,500 டோஸ் வந்தது. மக்கள் போட்டிபோட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3.10 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 46 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி வரத்து இல்லை. இதனால் 2-வது தவணை செலுத்த வேண்டிய தேதி கடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்படவில்லை. நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு அவர்கள் அலைந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 15 நாட்களுக்குப்பின் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3,360 கோவாக்சின் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 1,500 தடுப்பூசிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மீதமுள்ள தடுப்பூசிகள் முக்கூடல், ரெட்டியார்பட்டி, திருக்குறுங்குடி, பத்தமடை, முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட 13 மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி வரத்து குறித்து அறிந்ததும் தடுப்பூசி மையங்களுக்கு ஏராளமானோர் திரண்டனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை 6 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர். பெரும்பாலானோர் காலை உணவு கூட சாப்பிடாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்த நிலையில் 11 மணியை தாண்டிய பின்னரும் தடுப்பூசி வந்து சேரவில்லை.

இதையடுத்து அனைவருக்கும் பெயர் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்டு விட்டு வரிசையில் நிற்குமாறு தெரிவிக்கப்பட்டது.

ஒருவழியாக நண்பகல் 12 மணிக்கு மேல் தடுப்பூசி வந்து சேர்ந்ததை தொடர்ந்து அனைவருக்கும் செலுத்தப்பட்டது. 2-வது தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு மட்டுமே போடப்பட்டது.

திருநெல்வேலியில் 76 மையங்களில் நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. தென்காசி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் பல்வேறு மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு நேற்று போடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024