ஆர்டிஐ கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; தனக்கும் இந்தி தெரியாது எனக்கூறிய நீதிபதி: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவுசென்னை உயர் நீதிமன்றம்
The Hindu Tamil
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி, இது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார். தனக்கு அந்த மொழி தெரியாது என்றும், தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்றும், எனவே, இந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனக்கு தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார்.
இது குறித்து, மத்திய அரசு வருகிற 16-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment