சேவை செய்யாமல் கட்டணம்: 'கிளினிக்' நடத்தும் டாக்டர்கள் புகார்!
Updated : ஜூலை 29, 2021 06:30 | Added : ஜூலை 29, 2021 06:27
சென்னை : சுற்றுச்சூழல் துறை சார்பில், எவ்வித சேவையும் செய்யாமல், கட்டணம் செலுத்தி அனுமதி பெறும்படி, சிறிய மருத்துவ கிளினிக்குகளை வலியுறுத்துவதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
தமிழகத்தில், மருத்துவர்கள் சிறிய அறையில், 'கிளினிக்' வைத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். மருந்து மட்டும் எழுதி கொடுத்து, அதற்கு கட்டணம் வசூலித்து கொள்கின்றனர்; ஊசி போடுவதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், கிளினிக் வைத்திருப்போர் குறித்த விபரம் தெரிய வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனைவரும், மருத்துவ ஊரக பணிகள் சேவை கழகத்தில் பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
பதிவு கட்டணம் 5,000 ரூபாய். சான்றிதழ், ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும். அதை ஏற்று மருத்துவர்கள் முறைப்படி பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, 'பதிவு செய்தவர்கள் அனைவரும், மருத்துவக் கழிவுகளை முறையாக சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுற்றுச்சூழல் துறையிடம், தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்' என அறிவித்தனர். மருத்துவர்கள், சுற்றுச்சூழல் துறையை அணுகியபோது, அவர்கள் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்தம் போடும்படி அறிவுறுத்தினர்.
அதற்கு, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம். இது தவிர கூடுதலாக, 4,000 ரூபாய் பெற்று, மருத்துவக் கழிவுகளை சேமிக்க, மூன்று குப்பை தொட்டிகளை வழங்கினர். வேறு வழியின்றி மருத்துவர்கள், 2019 டிசம்பரில், 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். ஆனால், அந்த நிறுவனம், கடந்த ஆண்டு முழுதும் கழிவுகளை எடுத்து செல்ல வரவில்லை. மாதந்தோறும் வர வேண்டும் என்ற விதியை பின்பற்றவில்லை.
எவ்வித சேவையும் செய்யாமல், இந்த ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும்படி அந்த நிறுவனம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. 'ஒப்பந்தத்தை புதுப்பிக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சென்னையில் மட்டும், 3,000 கிளினிக்குகள் உள்ளன. தலா, 10 ஆயிரம் ரூபாய் என்றால், 3 கோடி ரூபாய் வசூலாகிறது. இப்பணம் யாருக்கு செல்கிறது என்பது தெரியவில்லை. பெரும்பாலான டாக்டர்கள், ஊசி பயன்படுத்துவதே இல்லை. ஆனால், அவர்களும் சான்றிதழ் பெற வேண்டும் என்கின்றனர். எனவே, புதிய அரசு இதற்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment