Tuesday, July 27, 2021

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., மத்திய அரசு முடிவுக்கு அவகாசம்

அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி., மத்திய அரசு முடிவுக்கு அவகாசம்

Added : ஜூலை 27, 2021 01:06

சென்னை : மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு குறித்து, மத்திய அரசு முடிவை எட்டும் நிலையில் இருப்பதால், பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க, மத்திய - மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, 2021 - 22 முதல் அமல்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, குழு அமைக்கப்பட்டுஅறிக்கை அளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, அகில இந்திய ஒதுக்கீட்டில், 2021 - 22ம் கல்வியாண்டில், மாநில சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறை மற்றும் விதம் குறித்து, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க., சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ''விசாரணையை அடுத்த வாரம் தள்ளிவைக்க வேண்டும். முடிவை எட்டும் நிலையில், மத்திய அரசு உள்ளது,'' என்றார்.இதையடுத்து, மத்திய அரசின் முடிவை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஆக., 3க்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024