மூடப்படும் ஓட்டல்கள்: ஆபத்தில் 10 லட்சம் குடும்பங்கள்
Updated : செப் 03, 2021 00:37
கொரோனா பாதிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், நேரடியாக 10 லட்சம் குடும்பங்களும், மறைமுக மாக 10 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார், மாநில தலைமை செயலர் - தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்:
குறைந்தபட்சம், 20 சதவீத லாபம் கிடைக்கும் என்ற கருத்தில், ஏராளமானோர் ஓட்டல் தொழிலுக்கு வந்தனர். பலர் அதில் புதுமைகளை புகுத்தினர். 'பிராண்ட்' உருவாக்கி, அதன் கிளைகளை பல இடங்களில் ஏற்படுத்தினர். பொதுவான ஒரு இடத்தில் சமையல் கூடம் அமைத்து, அங்கே சமைத்து கிளைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், உற்பத்தி செலவு குறைந்தது. வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த சம்பளத்தில் ஆட்கள் வேலைக்கு வரவழைக்கப்பட்டனர். 'ஸ்விக்கி, சுமாட்டோ' போன்ற இணைதள சேவை வாயிலாக உணவு களை, 'டோர் டெலிவரி' செய்ததால், ஓட்டல் தொழில் செழிப்பாகவே இருந்தது.
சீனிவாசராஜா, உரிமையாளர் - அடையாறு ஆனந்த பவன்:
இந்தியா முழுதும் அடையாறு ஆனந்த பவன் நிறுவனத்துக்கு, 140க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இருந்தன. அதில், 10 சதவீதம் மூடப்பட்டு விட்டது. எங்கள் ஓட்டல்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் பலர் வேலை இழந்துள்ளனர். ஓட்டல்கள் மூடப்பட்டு, வியாபாரம் இல்லாவிட்டாலும், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க வேண்டும். வாடகையை குறைக்க கட்டட உரிமையாளர்கள் மறுக்கின்றனர். வியாபாரம் இல்லாமல் பல லட்சம் ரூபாயை, எப்படி வாடகையாக கொடுக்க முடியும்?கொரோனா காலத்திலும், அரசுக்கு அனைத்து வரிகளையும் முழுமையாக செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.அத்துடன் தாள முடியாத கடன் சுமை. மேலும், முன்பை போல ஓட்டலுக்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர். இதனால், பழைய வர்த்தகம் இல்லை. முன்பு இருந்ததில், 20 சதவீதம் அளவுக்கு தான் வர்த்தகம் நடக்கிறது; செலவுகளோ குறையவில்லை; 5 சதவீத லாபம் கூட கிடைக்கவில்லை. ஓட்டல் தொழிலில் ஜாம்பவானாக அறியப்பட்ட, சரவண பவன் நிர்வாகமே தடுமாறி, தங்களுடைய பல கிளைகளை மூடிவிட்ட போது, சாதாரண ஓட்டல் தொழில் அதிபர்களின் நிலை மிக மோசம்.
ரவி, உரிமையாளர் - வசந்த பவன் ஓட்டல்கள்:
வருமான வரி, ஜி.எஸ்.டி., வரி, கடனுக்கு அபராத வட்டியில் இருந்து விலக்கு, திருப்பி செலுத்தும் காலத்தை அதிகரிப்பது, வட்டி விகிதத்தை குறைப்பது என எந்த சலுகையையும், ஓட்டல் அதிபர்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. சொத்து வரி, தண்ணீர் வரி, கழிவு நீர் வரி, மின்சார கட்டணம் என எதிலும், மூடி கிடந்த ஓட்டல்களுக்கு சலுகை கொடுக்கப்படவில்லை. ஓட்டல் தொழிலையும், அதை நம்பி இருக்கும், ௧௦ லட்சம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என அரசு நினைத்தால், தகுந்த நிபுணர் குழு அமைத்து, ஓட்டல் தொழிலில் இருப்போரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமோதரன், மேலாளர் - சரவண பவன் ஓட்டல்கள்:
பெரும்பாலான ஓட்டல்கள், வாடகை கட்டடங்களில் இயங்குகின்றன. இவர்களுக்கு தான் கொரோனா காலத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. கார், வீடு வாங்க கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி, 6 சதவீதம். ஆனால், தொழிலுக்கு கொடுக்கப்படும் கடனுக்கான வட்டி, 14 சதவீதம். அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் என பல நாடுகளில், தொழில் கடனுக்கான வட்டி 4 சதவீதம் தான். ஓட்டல் தொழில் நசிவடைவதால், நேரடியாக 10 லட்சம் குடும்பங்களும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் - -
No comments:
Post a Comment