வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் கோரிக்கை
Added : செப் 18, 2021 20:29
சென்னை:'வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள், தமிழகத்தில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் கொடுத்துள்ள கோரிக்கைமனு:தமிழகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெளிநாட்டில் மருத்துவம் படித்து உள்ளோம். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், நம் நாட்டில் எப்.எம்.ஜி.இ., தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பெற காத்திருக்கிறோம். அனைவரும், 2020 ஜனவரியில் விடுமுறைக்காக இந்தியா வந்தோம்.
கொரோனா காரணமாக, கல்லுாரிகளுக்கு திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, எங்கள் இறுதி செமஸ்டர் தேர்வை, 'ஆன்லைன்' வழியாக எழுதி தேர்ச்சி பெற்றோம். பின், நம் நாட்டில், எப்.எம்.ஜி.இ., தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தோம். ஆனால், இணையவழியில் கல்வி கற்று தேர்வு எழுதியதால், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.எங்களுடன் மருத்துவம் படித்த வெளிமாநில மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் தற்போது பயிற்சியை துவக்கி விட்டனர்.
தமிழகத்தில் மாணவர்கள் பயிற்சிக்காக செலுத்த வேண்டிய கட்டணத் தொகை, 2 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை உள்ளது.டில்லி போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில், கட்டணம் இல்லாமலே மாணவர்கள் பயிற்சி பெற முடிகிறது. இதுபோன்று தமிழகத்திலும் செய்தால் எங்களுக்கு பேரும் உதவியாக இருக்கும்.
எப்.எம்.ஜி.இ., தேர்ச்சி பெற்று, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சிக்காக காத்திருக்கும் மாணவர்கள், தமிழக மருத்துவமனைகளில், பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment