நேரில் ஆஜராகும்படி உத்தரவிட உறுதியான ஆதாரங்கள் தேவை'
Added : செப் 18, 2021 20:58
புதுடில்லி:'உறுதியான ஆதாரமின்றி யாரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2015ல், உ.பி.,யைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் டிரைவரின் மனைவி, விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தன் கணவரை, முதலாளி ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறி, அவரை விசாரிக்கும்படி கோரிஇருந்தார்.
விசாரணை நீதிமன்றம் ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா நேரில் ஆஜராகும்படி 'சம்மன்' அனுப்பியது. இதை எதிர்த்து ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு:
ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்படாத நபர் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.அதேசமயம் அந்த நபர் குற்றம் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் அல்லது சாட்சிகள் இருந்தால் மட்டுமே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 'வாரன்ட்' பிறப்பிக்க முடியும். எந்தவொரு ஆதாரமும் இன்றி சாதாரணமாக ஒருவரை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இது குறித்து, 2014ல் ஹர்தீப் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை ஆராயாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதி, எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாத நிலையில், மனுதாரரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment