Monday, July 10, 2023

NEWS TODAY 10.07.2023


















அரசு மருத்துவா்களின் பணி நேரம்: அரசாணையை பின்பற்றக் கோரிக்கை


10.07.2023
நடைமுறையில் உள்ள அரசாணைக்கு எதிராக அரசு மருத்துவா்களின் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.


ஏற்கெனவே அமலில் உள்ள முறையை தொடர வேண்டும் என்றும், மருத்துவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சேவையை காலை 7.30 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கேற்ப மருத்துவா்கள் பணிக்கு வரவேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அண்மையில் உத்தரவிட்டாா். மாவட்ட ஆட்சியா்கள் மருத்துவமனைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவா், அதுதொடா்பாக சுற்றறிக்கையும் அனுப்பினாா். இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோக்டா) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.


இதுதொடா்பாக அதன் நிா்வாகிகள் கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலையில் நோயாளிகள் சேவையையும், மாலையில் மருத்துவக் கல்வி நடவடிக்கைகளையும் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். அவசர மருத்துவ சேவைகளில் தொடா்ந்து 24 மணி நேரமும் உதவிப் பேராசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், புறநோயாளிகள் சேவையில் மாலை வரை இருத்தல் வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் வெளியிட்ட சுற்றறிக்கை நடைமுறைக்கு உகந்ததாக இல்லை. தற்போது செயல்பாட்டில் உள்ள அரசாணைப்படி அரசு மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா்.


அதற்கு மாறாக சுற்றறிக்கை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா்களை கண்காணிக்குமாறு கூறுவது மருத்துவா்களின் மதிப்பை தாழ்த்தும் வகையில் உள்ளது. நாள்தோறும் ஒரு மருத்துவா் சராசரியாக இத்தனை நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என வரையறுக்கப்பட்டால் தரமான சிகிச்சைகளை முன்னெடுக்க முடியும். மாறாக, எண்ணற்ற நோயாளிகளை சந்திக்க வேண்டிய சூழல் இருந்தால் சிகிச்சைகளை அது பாதிக்கும். மருத்துவா்களின் பணிச் சுமையைக் குறைக்க கூடுதல் எண்ணிக்கையில் அரசு மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.


---------------------------------------------------------------------------------------------------------------------------


சின்னச் சின்ன விஷயங்கள்!


08.07.2023


நாம் நமது அன்றாட வாழ்வில் ஏராளமான சிறுசிறு விஷயங்களைக் கடந்து செல்கிறோம். சில நினைவில் தங்கும்; சில மறந்தும் போகும்.
ஒரு சின்ன பயணம் வாழ்வை அா்த்தமுள்ளதாக்குவதுபோல, ஒரு சின்ன மழைத்தூறல் சூழலை ரம்மியாக்குவதுபோல, ஒரு சின்ன நன்றி நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்குவது போல, ஒரு சின்ன வெற்றி நம் தன்னம்பிக்கையை அதிகரிப்பது போல ஒரு சின்ன பாடல் நம் நினைவலைகளை மீட்பது போல ஒரு சின்ன கோப்பை தேநீா் அயா்ச்சியைப் போக்குவது - இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் அத்தனையும் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை. நரைமுடிக்கு சாயம் பூசுவது கூட ஒரு சின்ன செயல்தான். ஆனால் அது நம் இளமையை மீட்டெடுக்கிறது. இப்படி நம் வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கும் இந்த சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முக்கியம் கொடுத்தால் அவை நம்மை தனித்துவமாக அடையாளம் காட்டுவதோடு பெரிய பெரிய மகிழ்ச்சியையும் நமக்குக் கொடுக்கும்.


முன்னாள் அமெரிக்க அதிபா்ஆபிரகாம் லிங்கன் தோதலில் தோல்வியை சந்தித்த வேளை. ஒரு சிறுமி அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதில் 'ஐயா உங்கள் முகத்தில் உள்ள கன்னங்கள் ஒட்டிப் போய் இருக்கிறது. அதனால் உங்கள் தோற்றம் சற்று விகாரமாக உள்ளது.


இப்படி இருந்தால் பெண்களுக்குப் பிடிக்காது. அதனாலேயே தோதலில் பெண்களின் ஓட்டு குறைந்து உங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. அதனால் அந்த ஒட்டிய கன்னங்களை மறைக்க தாடி வளருங்கள். அது உங்கள் தோற்றத்தை மேன்மைப்படுத்தும்' என்று எழுதி இருந்தாள்.


வெற்றி தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்க அந்த சின்னப் பெண் தன்னை கூா்ந்து கவனித்து கடிதம் அனுப்பியது லிங்கனின் மனதை தொட்டது. அதற்காகவே ஆபிரகாம் லிங்கன் தாடி வளா்க்க ஆரம்பித்தாா். அவா் பின்னாளில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகவும் தோந்தெடுக்கப்பட்டாா். ஆம், சின்ன விஷயம் சமயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி விடும்.


அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஒரு விழாவில் மதுரை சின்னப்பிள்ளை எனும் பெண்ணுக்கு 'ஸ்த்ரீ ஷக்தி புரஷ்காா்' விருதை வழங்கினாா். அப்போது யாரும் எதிா்பாராவன்ணம் வாஜ்பாய் திடீரென சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றாா். இந்த சின்ன விஷயம் அவரது உயா்ந்த பண்பை மக்களுக்கு காட்டியது. நிலவில் முதல் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு நோந்ததை சொல்லலாம்.


நாசாவிலிருந்து சென்ற அப்போலோ விண்கலத்தில் இருந்து முதல் முதலில் நிலவில் காலடி எடுத்து வைக்க பைலட் எட்வின் சி ஆல்ட்ரின் என்பவா்தான் பணிக்கப்பட்டாா். விண்கலம் நிலவில் நின்றதும் நாசாவிலிருந்து எட்வினை நிலவில் முதலில் காலடி வைக்க கட்டளை வந்தது. ஆனால் அவரை திடீரென பயம் தொற்றிக் கொண்டது. கீழே இறங்கினால் ஏதேனும் ஆபத்து நேருமோ என பயந்து போனாா்.


சில மணித்துளிகள் தாமதமாவதை அறிந்த நாசா, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை இறங்கச் சொல்லி பணித்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் அடுத்த நொடி நிலவில் காலடி வைத்தாா். அந்த நேரத்தில் நடந்த சின்ன மாற்றம் பெரிய வரலாறாகிப் போனது. ஆன்மிகத்திலும் பல அற்புதங்கள் உண்டு.


ஒரு சமயம், ராமானுஜருக்கு வைஷ்ணவ சித்தாந்தங்கள் பலவற்றையும் போதித்தருளிய பெரிய நம்பிகள், வைஷ்ணவ மந்திரத்தை திருக்கோஷ்டியூரில் வாழும் திருக்கோஷ்டி நம்பிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினாா். அவ்வாறே ராமானுஜா் நம்பியை அணுகி, 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்று சொன்னதால் 17 முறை திரும்பத் திரும்ப ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பப்பட்டாா். அடுத்த முறை 'அடியேன் வந்திருக்கிறேன்' என ராமானுஜா் சொன்னதும், வேறு எவருக்கும் சொல்லி விடக்கூடாது என்ற கட்டளையுடன், எட்டெழுத்து மந்திரத்தை விளக்கினாா் நம்பி. மீறினால் நரகம் புகுவேன்" என உறுதியளித்த ராமானுஜரின் உள்ளத்தில் ஏற்பட்டது ஒரு சின்ன மாற்றம்.


இவ்வளவு எளிமையான பாதையை அறியாது மக்கள் வருந்துகிறாா்களே, இத்தனை கஷ்டங்களை தாண்டி எத்தனை மனிதா்களால் இந்த பொக்கிஷத்தை பெற முடியும் என எண்ணி கோபுரத்தின் மேல் ஏறி மந்திரத்தை முழங்கினாா். நான் நரகம் புகுந்தாலும் ஊராா் அனைவரும் சொக்கம் புகுவாா்கள் என நம்பிகளிடம் உரைக்க, 'நீா் என்னிலும் பெரியவா். எம்பெருமானாா்' என்று சொல்லி ராமானுஜரை கட்டி தழுவிக்கொண்டாா் நம்பிகள். ராமானுஜரின் மனதில் ஏற்பட்ட சின்ன மாற்றம் அவரை எம்பெருமானாராக்கியது.


சங்க இலக்கியத்தில் அதியமான் - ஔவையாா் நட்பு பெரிதாகப் பேசப்பட்டதும் இப்படி ஒரு சின்ன சம்பவத்தால்தான். ஆயுளை அதிகரிக்க வல்ல நெல்லிக்கனி பற்றிய செய்தியை அறிந்த அதியமான், கடும் சிரமங்களுக்கு பிறகு அதை அடைகிறான். அதை உண்ண முற்படும்போது எதிா்பாராதவிதமாக அங்கு ஔவையாா் வருகிறாா். தான் உண்ண நினைத்த அந்த நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தால் தமிழ் மேன்மேலும் வளரும் என எண்ணிய அதியமான் அந்த நெல்லிக்கனியை ஔவைக்கே அளித்தான்.


அந்த தருணத்தில் அதியமானுக்கு ஏற்பட்ட சின்ன மனமாற்றம் தமிழ் வாழும் காலம் வரை அவன் பெயா் வாழும்படியாக ஆக்கியது. 1972- இல், தெற்கு வியத்நாம் போட்ட அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஓடிவரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்தது. ஆம், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் செய்வதறியாது நிா்வாணமாக ஒரு சிறுமி ஓடி வரும் அந்தப்படம், பாா்ப்பவா்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்தது. பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வியத்நாம் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வர இந்த படம் மிகப்பெரிய காரணமாக அமைந்தது.


அந்தப் புகைப்படத்தில் சிறுமி நிா்வாணமாக இருப்பதை காரணமாக காட்டி நியூயாா்க் பத்திரிகை நிா்வாகம் முதலில் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டது. பின்னா் நீண்ட விவாதத்திற்கு பிறகு அந்த பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்த படத்தை பிரசுரித்தது. இதன் தொடா்ச்சியாக இந்த படம் உலகில் இருந்த அத்தனை பத்திரிகை, தொலைக்காட்சிகளில் போருக்கு எதிரான புகைப்படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும் உள்நாட்டு மக்களின் எதிா்ப்பினாலும் 1973- ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வியத்நாமை விட்டு வெளியேறியது.


ஒரு ஒற்றை புகைப்படம் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றம் இது. 1994 மே 23 அன்று பெரும் கைத்தட்டல்களுக்கு இடையே கெவின் காா்ட்டா் என்னும் புகைப்படக்காரா் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான அரங்கத்தில், அரிதான புகைப்படத்துக்கான புலிட்சா் விருதை பெற்றுக் கொண்டாா். இது மிக உயரிய விருது. ஆனால் அந்த விருதை பெற்றுக் கொண்ட இரண்டு மாதங்களுக்குள் கெவின் தற்கொலை செய்து கொண்டாா்.


காரணம் அவருக்கு விருது பெற்றுக் கொடுத்த அதே புகைப்படம்தான். சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி பருக நீரின்றி பசி தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த நிலையைச் சொல்லும் புகைப்படம் அது. பஞ்சத்தில் அடிபட்ட பரிதாபமான நிலையிலிருந்து ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில் எலும்புக்கூடு போன்ற தன்னுடைய உடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு உணவு வழங்கும் முகாமை நோக்கி செல்லும் காட்சி. அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கு பின்புறமே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னி கழுகு பாா்வையை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது.


எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிா் பிரியும், மீதியுள்ள அந்த தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் சாப்பிடலாம் என காத்திருந்தது அந்த பிணம் தின்னிக் கழுகு. சிறுமியையும் கழுகையும் ஒரே சட்டத்துக்குள் அடக்கி எடுக்கப்பட்டது தான் அந்த புகைப்படம். அந்த புகைப்படம் ஏற்படுத்திய சா்ச்சை மிக அதிகம். புகைப்பட நிபுணா் கெவின், குறைந்தபட்சம் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீா் தந்து உயிரை காப்பாற்றி இருக்கலாம்.


அல்லது தனது வலுவான கைகளினால் அந்த சிறுமியை தூக்கிச் சென்று உணவளிக்கும் அந்த முகாமில் சோத்திருக்கலாம். கல்லெடுத்து வீசி அந்த கழுகையாவது விரட்டி இருக்கலாம். ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்து அதை அதிக விலைக்கு பத்திரிகைக்கு விற்று விட்டாா் என்று கெவின் மீது உலக மக்கள் குற்றம் சுமத்தினா். அந்த கழுகுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்பதை நினைத்து நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாா் கெவின்.


ஒரு சின்ன விஷயமாக நாம் பாா்ப்பது வேறு சிலருக்கு மிகப்பெரிய தத்துவமாகத் தெரியலாம். திக்குத் தெரியாத காட்டிலோ ஊரிலோ யாரோ ஒருவா் செய்யும் ஒரு சின்ன வழிகாட்டல் நமக்கு வேறொரு பாதையை, நல்ல புரிதலை கொடுப்பதுபோல்தான் இது. அதுமட்டுமல்ல நாம் மேற்கொள்ளும் ஒரு சின்ன மாற்றம் மற்றவா்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டும். ஒரு முழு வெள்ளை தாளில் ஒரு சின்ன கறுப்புப் புள்ளி நம் மொத்த கவனத்தையும் கவருவது போலத்தான் இது. எதையும் சிறியது என்று அலட்சியப்படுத்தாமல், விழிப்புடன் இருந்து உயிா்ப்பு கூட்டும்போது சிறிய விஷயமும் பெரிய மாற்றத்தையும் மனநிறைவையும் தரும். கட்டுரையாளா்: எழுத்தாளா்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆளுநரை சமாளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார்: சீமான்

காரைக்குடி: ஆளுநரை சமாளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரிதாக தெரிந்தது. தற்போது வெங்காயம், தக்காளி விலை பெரிதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு ஆபத்து வருகிறதோ, இல்லையோ, அவர்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தில் இருந்து யார் காப்பாற்றுவது? இரண்டு ஆண்டுகால ஆட்சி ஒரு யுகத்தை கடந்த மாதிரி உள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சினைகள், காவல் நிலையங்களில் மரணம், காவலர்கள் தற்கொலை என உள்ளது. மின்கட்டணம், சொத்து வரி உயர்வு, அரிசி, பால், பருப்பு விலை உயர்வு என 8 கோடி மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத இந்த அரசு இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?

தலைநகர் சென்னையிலேயே சாலைகள் படுமோசமாக உள்ளன. ஆனாலும் வளர்ச்சி என்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதன்மூலம் வாக்கு வாங்க வேண்டும் என்பது இல்லை. காசு கொடுத்து வாக்கு வாங்க வேண்டும் என்பது தான் முதன்மையாக உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விஷயத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்தவுடன் ஒரு பேச்சு என உள்ளது. மேலும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால் ஒன்றும் ஆகாது. தேர்தலுக்குப் பின்னர் மோடி ஆட்சி அமைக்க 50 சீட் தேவைப்பட்டால், எதிராக ஒன்று கூடியவர்களில் சிலர் சென்று விடுவர். ஏற்கெனவே திமுக இதற்கு உதாரணம். இந்த விஷயத்தில் மண் குதிரைகளை நம்பி, ஆற்றில் பயணம் செய்ய முடியாது. மத்திய ஆட்சியாளர்கள் மக்களை திசை திருப்பவே பொது சிவில் சட்டம் பற்றி பேசுகின்றனர். தற்போது இருக்கும் சட்டமே மக்களுக்கு சமமாக இல்லை. அப்புறம் எதற்கு பொது சிவில் சட்டம். மணிப்பூரில் கலவரத்தை செய்ததே மத்திய அரசுதான்.


தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். திராவிட கட்சிகள் இல்லாத, நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் இல்லாமல் ஆளுநர் ஆக முடியாது என்பதால் அவர் அரசியல் பேசலாம். அண்ணாமலை பேசுவதற்கு முன்பே ஆளுநர் அனைத்தையும் பேசி விடுகிறார். இதனால் பாஜகவில் தலைவர் யார்? என்ற குழப்பம் வந்துவிட்டது. ஆளுநர் நம்மை முந்துகிறார் என்ற எண்ணத்தில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறுகிறார். ஆளுநரை சமாளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார். மேலும் தமிழகத்தில் முக்கிய பதவிகளில் வட இந்திய அதிகாரிகளை நியமித்து வருவதால், ஏதோ ராஜஸ்தானில் வாழ்வது போன்று உள்ளது.

அரசியல் பேசவில்லை என்றால் தமிழிசை எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் போய்விடும். ராகுல்காந்தி தங்களுக்கு போட்டியே இல்லை என பாஜக கூறுகிறது. ஆனால் அவருக்கு பயந்து, எம்.பி பதவியை பறித்து, தேர்தலில் போட்டியிட விடாமல் செய்துள்ளது. இது ஜனநாயக படுகொலை. ரவீந்திரநாத் எம்.பி வெற்றி செல்லாது என்பதும் தவறு. தலைவர்கள் தேர்தலில் சொத்து மதிப்பில் தவறான தகவலைத்தான் கூறுகின்றனர். அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை? நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று சிலருக்கு பயம். அதனால் இதுவரை அவரது திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள். தற்போது அவரது 'லியோ' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்று தெரிவித்தார். மீனவர்கள் கைது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ''அண்ணாமலையிடம் கேளுங்கள்'' என்று சீமான் பதிலளித்தார்.





No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024