Thursday, July 13, 2023

“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”


“நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி!”



பிரீமியம் ஸ்டோரிNews

வெ.இறையன்பு

எந்தப் பணியையும் கோப்புகளில் பார்ப்பதற்கும் களத்தில் சரிபார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பரிசோதனைக்கூடத்தில் இருந்து வயல்வெளிக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இடைவெளியை உணர்ந்து சரி செய்வதே நிர்வாகப் பணி

”முப்பந்தைந்து ஆண்டுக்கால குடிமைப் பணியிலிருந்து, தமிழக மக்களின் அன்பில் நனைந்து ஓய்வுபெற்றிருக்கிறார் வெ.இறையன்பு. அபாரமான உழைப்பு, தீர்க்கமான திட்டமிடல், உறுதியான ஒருங்கிணைப்பு என, பணியாற்றிய எல்லாத் துறைகளிலும் நல்லடையாளம் பதித்தவர். கடந்த இரண்டாண்டுக் கால தலைமைச் செயலர் பணி பல சவால்களை அவர்முன் வைக்க, அனைத்தையும் திறம்படக் கடந்தார். ஓய்வுக்குப் பிறகும் சந்திப்புகள், பயணங்கள் என்று பரபரப்பாக இருந்தவரிடம் உரையாடினேன். பணிக்கால அனுபவங்கள், எதிர்காலத் திட்டங்கள் என மனம்திறந்து பேசினார்.

‘‘ஓய்வு பெறும் நிகழ்ச்சி முடிந்ததும் அப்பாவைப் பார்க்க சேலம் பறந்துவிட்டீர்கள். என்ன சொன்னார் அப்பா?’’

‘‘ ‘ஓய்வு பெற்றாலும் ஓய்ந்திருக்காதே’ என்றார்.’’

‘‘முப்பத்தைந்து ஆண்டுக்கால நிர்வாகப் பணி மனத்துக்கு நிறைவாக இருந்ததா? நினைத்த அனைத்தையும் செய்ய முடிந்ததா?’’

‘‘நிர்வாகம் என்பது தனி மனித முயற்சி அல்ல. அது கூட்டுப் பொறுப்பு. நினைத்த அனைத்தையும் செய்வது யாருக்கும் சாத்தியமல்ல. ஆனால் நிர்வாகப் பணியின் மூலம் விரும்பத்தக்க மாற்றங்களை ஓரளவேனும் விளைவிக்க முடியும். அவை நம் கண் முன்னாலேயே பூத்துக் குலுங்குவதையும் பார்க்க முடியும். அந்தத் திருப்தி, மழை நாளில் பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீராய் உள்ளத்தில் ஈரமாய் இருக்கிறது.’’

‘‘பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகள் முக்கியமானவை. எதிர்பார்த்த சுதந்திரத்தோடு இயங்க முடிந்ததா?’’

‘‘ ‘மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், ஆனால் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்படுகிறான்’ என்று ரூசோ குறிப்பிடுகிறார். பிறக்கும்போதுகூட மனிதன் சுதந்திரமாக இல்லை என்பதே உண்மை. அவனுக்குத் தாயின் கதகதப்பும், தந்தையின் அரவணைப்பும் தேவைப்படுகிறது. சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல, ஒப்பீடு கொண்டது. இந்தப் பொறுப்பில் பல நிகழ்வுகளில் கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தோடு நான் செயல்பட்டேன்.’’

‘‘இந்த இரண்டாண்டு பணிக் காலத்தில் மிகவும் கடினமான முடிவு என்று ஏதாவது எடுக்க நேர்ந்ததா?’’

‘‘முக்கியமான பதவி என்பதே பல கடினமான முடிவுகளை எடுக்கத்தான். தொடக்கத்தில் எளிது போலத் தோன்றும் பல நிகழ்வுகள், சரியான அக்கறை செலுத்தாவிட்டால் கடினமான முடிவை எடுக்கும் நெருக்கடியை நிகழ்த்திவிடும். நிர்வாகத்தில் அத்தனை கோப்புகளுமே முக்கியமானவைதான்.’’

‘‘பல நேரங்களில் நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறீர்கள். நிர்வாக மட்டத்தில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள். மிகவும் நிறைவளித்த பணி என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?’’

‘‘எந்தப் பணியையும் கோப்புகளில் பார்ப்பதற்கும் களத்தில் சரிபார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. பரிசோதனைக்கூடத்தில் இருந்து வயல்வெளிக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் இடைவெளியை உணர்ந்து சரி செய்வதே நிர்வாகப் பணி. பல மாற்றங்கள் நடந்திருப்பதாக நீங்களே ஒப்புக்கொள்வது அதற்குச் சான்று. ஆனால் அவை தனிப்பட்ட சாதனைகள் அல்ல, ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் துரிதமான செயல்பாடு. நான் மிகவும் பெரிதாக எண்ணுவது, புதிய சாலைகளைப் போடும்போது, பழைய சாலைகளைச் சுரண்டிவிட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுதான். களத்தில் ஆய்வு செய்து அவ்வாறு போடப்படாத சாலைகளைப் பெயர்த்தெடுத்து மீண்டும் போடச் செய்தோம். இப்போது அது பெரும்பாலான நேர்வுகளில் பிறழாமல் பின்பற்றப்படுகிறது.’’

வெ.இறையன்பு

‘‘நிறைய எழுதுபவர் நீங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதேனும் எழுதினீர்களா?’’

‘‘ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கைப்பட நிறைய கடிதங்கள் எழுதினேன்.’’

‘‘தலைமைத் தகவல் ஆணையர் ஆவீர்கள் என்ற பேச்சு இருந்தது. டி.என்.பி.எஸ்.சி-க்குத் தலைவர் ஆவீர்கள் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வதாகத் திட்டம்?’’

‘‘இளைஞர்களோடும் மாணவர்களோடும் இணைந்து பயணிப்பதே திட்டம்.’’

‘‘மக்களுக்கு இப்போது அதிகாரிகள் மீது அதிகம் விரக்தியும் வெறுப்பும் இருக்கின்றன. ஒரு நல்ல அதிகாரி எப்படி இருக்க வேண்டும்?’’

‘‘ ‘அதிகாரி வீட்டுக் கோழி முட்டை, குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்’ என்பது பழமொழி. எனவே வெறுப்பு எப்போதும் இருக்கிறது. ஒரு நல்ல அதிகாரி கண்களில் கனிவுடனும், காதுகளில் கடன் கொடுக்கும் கருணையுடனும், இதயத்தில் ஈரத்துடனும், உதடுகளில் இனிப்புடனும், உள்ளத்தில் உற்சாகத்துடனும், கைகளில் சுத்தத்துடனும், கால்களில் சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.’’

‘‘தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் திட்டம் இருக்கிறதா?’’

‘‘தேடி வருகிறவர்களுக்கு வழிகாட்ட சுட்டு விரலாகவும், இணைந்து பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் பற்றிக்கொள்ளச் சுண்டு விரலாகவும் எப்போதும் இருப்பேன்.’’

‘‘பணி ஓய்வு பெறும் முன், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுறுத்தியிருந்தீர்கள். பெரியவர்கள் மத்தியிலும்கூட வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?’’

‘‘சைமன் சினக் என்கிற அறிஞர் கூறுவதுபோல, இன்றைய தலைமுறை கவனச்சிதறல் தலைமுறை. ஐந்து நிமிடங்கள் ஒன்றை ஆழ வாசிக்கிற திறனை அவர்கள் மின்னணுச் சாதனங்களால் இழந்து விட்டார்கள். நெறிப்படுத்தப்பட்ட வாசிப்பு அவர்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்தி மேலும் தேட ஊக்குவிக்கும். அதற்கான சின்ன முயற்சியே, காரிருளில் ஏற்றப்படுகிற இந்தச் சிறிய அகல் விளக்கு.’’

‘‘பொதுவாக நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் அணுக முடியாத உயரத்தில் இருப்பார்கள். தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும் எளிமையாக இருந்தீர்கள். இதில் யார் உங்களுக்கு முன்மாதிரி?’’

‘‘இன்னும் உயர்ந்த பதவிகளில் உட்கார்ந்திருந்த எத்தனையோ மாமனிதர்கள் வழிந்தோடும் எளிமையுடனும், கடற்பஞ்சு போன்ற மென்மையுடனும் இருப்பதை தரிசித்திருக்கிறேன். சாதனை புரிந்தவர்கள் சத்தமில்லாமல் நடமாடுவதைக் கண்டு வியந்திருக்கிறேன். அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் முத்துக்கல்லைவிட அன்றாடம் பயன்படுத்தும் உப்புக்கல்லுக்கே அதிக மகத்துவம் என்பது எளிமையைப் புரிய வைக்கும் உண்மை. நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தலைமைப் பண்புக்கான தகுதி. எந்த நிலையிலும் மாறாமல் இருப்பதே மனிதனாக வாழ்வதற்கான அத்தாட்சி.’’

‘‘தண்டோரா தொடங்கி தலித் ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்ற முடியாத நிலை வரை பலவற்றையும் சீர்செய்தீர்கள். சமூகத்தின் சாதியப் படிநிலை ஒழிய இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்?’’

‘‘மாணவர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் சமுதாய மடைமாற்றம் ஏற்படும். அதை நோக்கி நாம் உழைக்க வேண்டும். மாநகரங்களில் சாதி என்கிற கறை கரைந்து வருகிறது. சிற்றூர்களில் இன்னும் அது மச்சமாக மருவுவதுதான் வேதனையாக இருக்கிறது.’’

‘‘இன்றும் தலித் தலைவர்களால் கொடியேற்ற முடியாத நிலை இருக்கிறது. அப்படியான ஆதனூருக்கு நீங்கள் நேரில் சென்றீர்கள். தடுத்த மக்கள் உங்களை எப்படி எதிர்கொண்டார்கள்?’’

‘‘நிர்வாகம் தோள் கொடுக்கிறது என்றால் பாகுபாடுகள் அப்போதைக்கு அடங்கிப்போவது இயல்பு. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு பாப்பாபட்டி, கீரிப்பட்டி. ஆதனூரிலும் அமைதியாகவே வரவேற்றார்கள், அன்பாகவே உபசரித்தார்கள்.’’
வெ.இறையன்பு

‘‘இதுமாதிரியான புரையோடிப்போன சமூக அநீதிகளை அதிகாரத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அல்லது வேறென்ன மாற்றம் நிகழ வேண்டும்?’’

‘‘அதிகாரம் கொண்டு எதையும் முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் அதை அழிக்க அதிகாரம் பக்கபலமாக இருக்க வேண்டும்; ஒரு பக்கம் சாய்ந்துவிடக் கூடாது.’’

``தலைமைச் செயலராக இருந்தபோது வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் கோரிக்கைகளைக்கூட கவனமெடுத்து நிறைவேற்றினீர்கள். எல்லாவற்றையும் எப்படி கவனித்து நடவடிக்கை எடுக்க முடிந்தது?’’

‘‘எந்தக் குறுஞ்செய்தியாக இருந்தாலும் பெறப்பட்டவுடன் தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பிவிடுவேன். என் இல்லத்திலிருந்து அலுவலகத்திற்குச் செல்ல அரை மணி நேரம் ஆகும். அப்போது அந்த அலுவலரிடம் பேசி மாலைக்குள் அறிக்கை வேண்டும் என்று அறிவுறுத்துவேன். இரவு இல்லம் திரும்பும்போது பெரும்பாலானவற்றிற்குத் தீர்வு கிடைத்திருக்கும். சில குறுஞ்செய்திகள் முதலமைச்சர் அவர்களாலேயே அன்றாடம் முன்மொழியப்படுவதுண்டு.’’

‘‘தலைமைச்செயலாளராக இருந்த காலத்தில் அதிகாரிகள் உங்களை எப்படி எதிர்கொண்டார்கள்?’’

‘‘அதிகாரிகள் எளிமையாக நடந்துகொண்டால் அலுவலர்கள் நீடித்த உழைப்பைத் தருவார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் களத்தில் பயணித்தால் அக்கறையோடு பாடுபடுவார்கள். கண்டிப்பைவிட கனிவை அதிகம் நேசிக்கிறார்கள். ஒற்றைச் சொல்லையே உத்தரவாக எண்ணி உழைப்பவர்கள் அதிகம். கட்டளை இடுவதைவிட கைப்பிடித்து அவர்களை வழிநடத்தினால் மகிழ்ச்சியோடு கடைப்பிடிப்பார்கள். எந்த வகையிலும் ஊக்குவிக்க முடியாத ஒரு சிலர் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. அவர்களுக்குக் குரலை உயர்த்தியும், விரலை உயர்த்தியும் சொன்னால்தான் புரியும்.’’

‘‘காவல் நிலையங்களில் வீணாகக் கிடந்த வாகனங்களை ஏலம்விட வைத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் பிரச்னை எப்படி உங்கள் கவனத்துக்கு வந்தது?’’

‘‘நான் டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் பணியாற்றியபோதுதான் இதை நேரில் அனுபவித்தேன். வாகனத்தை நிறுத்தக்கூட முடியாமல் வழிமறிக்கும் பழுதுபட்ட வண்டிகள் அங்கு நிறைய. ஒவ்வொரு வளாகத்திலும் இத்தகைய அவலம் அதிகம் என்பதை அறிந்தே அத்தகைய அறிவுரை அளிக்கப்பட்டது. வாராவாரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏலம் விடப்படாத இடங்களை ஊடகங்களும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்படுத்தின. இது ஒருவரின் வெற்றி அல்ல, ஒட்டுமொத்த வெற்றி.’’

‘‘செஸ் ஒலிம்பியாட் உங்கள் பணிக்காலத்தில் ஒரு சாதனை நிகழ்வு. அந்தக் காலகட்டத்தின் சவால்களை நினைவுகூர முடியுமா?’’

‘‘மற்ற இடங்களில் செஸ் ஒலிம்பியாட் நடத்த இரண்டாண்டுகள் அவகாசம் தேவைப்படும் என்கிற நிலையில் நான்கே மாதங்களில் அது நிகழ்த்தப்பட்டது தமிழ்நாடு அரசின் சாதனை. 182 நாடுகள் கலந்து கொண்டன. அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் வருகிறபோது புன்னகையுடன் வரவேற்றோம்; அவர்கள் திரும்பும்போது சிரித்த முகத்துடன் சென்றார்கள். தினந்தோறும் குழுக் கூட்டம், ஏகப்பட்ட கள ஆய்வு, குழுக்களின் ஒருங்கிணைப்பு, கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு, ஆகியவையே அது வெற்றி பெற்றதற்குக் காரணங்கள். முதலமைச்சர் அவர்களின் முழுமையான ஈடுபாடே கிரியா ஊக்கியாக இருந்தது.’’

‘‘உங்களை முன்மாதிரியாகக் கருதும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’

‘‘ஒரே ஒரு அறிவுரைதான். யாருடைய அறிவுரையையும் பின்பற்றாதீர்கள். உள்மனம் உரைப்பதை உள்ளார்ந்து செய்யுங்கள்.’’

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...