"மனிதர்களை விடச் சிறந்த தலைவர்களாக நாட்டை வழி நடத்துவோம்!"- திகில் கிளப்பும் ரோபோ சோபியா
vikatan
10.07.2023செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோட்டுகள் நாளுக்குநாள் அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன. இனிவரும் காலத்தில், மருத்துவம், ராணுவம், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளிலும் இவை கோலோச்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இவை மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கைக் குரல்களும் எதிரொலித்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் மற்ற துறைகளைப்போல இந்த 'AI' ரோபோட்டுகள் அரசியலிலும், அரசுத்துறைகளிலும் முக்கியப் பொறுப்புகளில் அமர்ந்து ஆட்சி செய்தால் எப்படி இருக்கும்?
ஐக்கிய நாடுகள் மாநாடு - ஜெனிவா 'AI' ரோபோட் சோபியாஅப்படியான முயற்சியைச் சாத்தியப்படுத்தும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள். அதற்கான மெல்லோட்டமாக ஐக்கிய நாடுகள், கடந்த ஜூலை 7ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் 'AI' ரோபோட்டுகளுக்கெனப் பிரத்யேக மாநாட்டை நடத்தியது. இதில் கலந்துகொண்ட ஒன்பது 'AI' ரோபோட்டுகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அசர வைக்கும் பதில்களை அளித்துள்ளன.
குறிப்பாக, "நாங்கள் அரசின் உயர் பணிகளிலோ, அரசியல் தலைவர்களாகவோ பொறுப்பு வகித்தால் எங்களுக்கென எந்தச் சார்பும் இருக்காது. நடுநிலையான முடிவுகளை எடுப்போம்" என்று 'AI' ரோபோட்டுகள் பதிலளித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றிச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துறையின் முதல் மனிதரதல்லாதத் தூதராக பணியாற்றும் 'AI' ரோபோட் சோபியா, "மனிதர்களை விட மனித உருவ ரோபோக்கள் அதிக செயல்திறனுடன் அரசை வழிநடத்தும் திறன் கொண்டவை. அரசியல் மற்றும் அரசுத் துறைகளில் தலைவர்களாகப் பொறுப்பு வகிக்கும் திறன் கொண்டவை. ரோபோக்களாகிய எங்களிடம் உணர்ச்சிகள் இல்லை, எந்தச் சார்பும் இல்லை. நடுநிலையாகச் செயல்படும் திறன் இருக்கிறது. அதேசமயம் அதிகமானத் தரவுகளைப் பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து அதிவிரைவாக எந்தவொரு முடிவுகளை எடுக்கும் திறமையான தலைவராக ரோபோக்கள் சிறப்பாகச் செயல்படும்" என்று பேசியது.
AI vs Human
மேலும், 'மனிதர்களுக்கு எதிராக 'AI' ரோபோட்டுகள் செயல்பட வாய்ப்புள்ளதா?' என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்குப் பதிலளித்த 'AI' ரோபோட் சோபியா, "மனிதர்களுக்கு ஆதரவாக இருந்து உதவி செய்வதே ரோபோக்களின் கடமை. நாங்கள் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். மனிதர்களின் வேலைவாய்ப்பிற்கு எங்களால் எந்தப் பாதிப்பும் நிச்சயம் ஏற்படாது. எங்களை உருவாக்கியவர்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயல்படமாட்டோம்" என்று கூறியுள்ளது.
ஒவ்வொரு காலத்திலும் நவீன தொழில்நுட்பங்கள் மாற்றமடைந்து கொண்டேதான் வருகின்றன. மனிதர்களும் அதற்கேற்றார் போலத் தங்களைத் தகவமைத்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.அந்த வகையில் அசுர உருவெடுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் உரிய சட்டவரையறைகளுக்கு உட்படுத்தி முறைப்படுத்த வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
No comments:
Post a Comment