Sunday, July 9, 2023

NEWS TODAY 09.07.2023















வாரம் ஒரு வந்தே பாரத் ரயில்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாரம்பரிய நீராவி இன்ஜின் வடிவில் வடிவமைக்கப்பட்ட மின்சார ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளையும் சனிக்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாட்டில் அறிவியல் எவ்வளவு வளா்ச்சி அடைந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்பது தான் நாட்டின் பிரதமா் நரேந்திர மோடியின் எண்ணம். அந்த வகையில் பாரம்பரியமான நீராவி ரயில் இன்ஜின் வடிவில் இந்த புதிய மின்சார ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை சிறப்பாக வடிவமைத்த பெரம்பூா் மற்றும் ஆவடி ரயில்வே அதிகாரிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயிலுக்கு பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 முதல் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயிலை பாரம்பரிய சுற்றுலா தலங்கள், புனித தலங்களுக்கு இயக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறையிடம் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

ரயில்வே வளா்ச்சிக்காக 2014 -ஆம் ஆண்டு வரை சராசரியாக தமிழகத்துக்கு ரூ. 870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.6,017 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் தமிழகத்தில் 90 ரயில் நிலையங்கள் சா்வதேச அளவில் தரம் உயா்த்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களைப் பொருத்தவரை கிட்டத்தட்ட வாரத்துக்கு ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா். இந்த ஆய்வின் போது தெற்கு ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனா். ஐ.சி.எஃப்-இல் ஆய்வு: இதைத் தொடா்ந்து, சென்னை ஐசிஎஃப் ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்துக்கு மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது: இங்கு தயாரிக்கப்பட்டு வரும் ரயில்களில் 25 பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை பாா்வையிட்டேன்.

முன்னதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருப்பதால் எளிதில் கறை படிகிறது. அதனால் தற்போது ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்தில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ரயில் பயணம் குறித்த கருத்துகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் ரயில் பெட்டிகளில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா். நீராவி இன்ஜின் வடிவில் மின்சார ரயில் தயாா்: சொகுசு வசதிகள், உணவகத்துடன் 48 போ பயணிக்கலாம் பாரம்பரிய நீராவி இன்ஜின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார ரயிலில் 3 இருக்கை வசதி கொண்ட குளிா்சாதன பெட்டிகள் மற்றும் ஒரு குளிா்சாதன உணவகப் பெட்டி என மொத்தம் 4 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரயிலில் மொத்தம் 48 பயணிகள் பயணிக்க முடியும். பயணத்தின்போது பயணிகளின் வசதிக்கேற்ப சாய்ந்து அமா்ந்து கொள்ளும் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் ரயிலில் இருந்தபடி வெளியில் உள்ள இயற்கை காட்சிகளை எளிதில் பாா்த்து ரசிக்க ஏதுவாக பெரிய கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் அவசரகால ஜன்னல்கள் உள்பட 10 ஜன்னல்கள் உள்ளன.

மேலும், ஒவ்வொரு நிறுத்தங்களும் எண்ம பலகை மூலம் பல்வேறு மொழிகளில் எழுத்து மற்றும் ஒலி மூலமாகப் பயணிகளுக்கு அறிவிக்கப்படும். தீயினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பெட்டிகளின் தரை தீப்பிடிக்காத ரப்பரால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 28 பயணிகள் உணவு உண்ணும் வகையில் உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

‘அரசு ஊழியர்களுக்கு ரூ.1000 கிடையாது’ - யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி? - தமிழக அரசு தகவல்

சென்னை: பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்றும், ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விண்ணப்பிக்கும் நடைமுறைகள்...குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்துக்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்பத் தலைவி வரையறை:குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களைக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.ரூபாய் 2.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.


தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.

ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.


விதிவிலக்குகள்: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


------------------------------------------------------------------------------------------------------------------------------
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையின் கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை


பாமக நிறுவனர் ராமதாஸ்


சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற விதியை தளர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்.டி., எம்.எஸ்) உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இம்முடிவு தமிழக மாணவர்களுக்கு நன்மை செய்வதைப் போலத் தோன்றினாலும், ஒரு பிரிவு தமிழக மாணவர்களை இது கடுமையாக பாதிக்கும்.


தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை கடந்த 6ம் நாள் வெளியிடப்பட்டது. வரும் 13ம் நாள் வியாழக்கிழமை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கெடு வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தகுதிகளில் இளநிலை மருத்துவப் படிப்பையும், கட்டாயப் பயிற்சியையும் தமிழகத்தில் மேற்கொண்டவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒருவகையில் இது வரவேற்கத்தக்கது. தமிழக மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் விருப்பம் தான் இதற்கு காரணம் என்பது புரிகிறது.


ஆனால், மருத்துவப் படிப்பில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள், புகழ்பெற்ற மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ள சூழலில், அவற்றில் படித்த தமிழக மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது தவறானது. இந்த முடிவால் பாதிக்கப்படப் போவது தமிழக மாணவர்கள் தான். ஆம், தமிழக மாணவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்திருந்தால், அவர்களால், அவர்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர முடியாது.


நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள், அதனடிப்படையில் தில்லி எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை ஜிப்மர் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவே விரும்புவார்கள். அதேபோல், சிலர் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அண்டை மாநிலங்களில் உள்ள மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பை படிப்பார்கள். அவர்களின் செயல் தவறு இல்லை; அதை எவரும் குறைகூற முடியாது.


பிற மாநிலங்களில் மருத்துவம் படித்தாலும், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இளநிலை மருத்துவம் படித்து விட்டு தமிழகத்தில் தான் அவர்கள் பணியாற்றுவார்கள். பிற மாநிலங்களில் அவர்கள் மருத்துவம் படித்தது கூட, புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் தான் இடம் கிடைத்தது என்பதாலும் தானே தவிர, தமிழகத்துக்கு எதிரான மனநிலையால் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று மருத்துவம் பயில்வது குற்றம் அல்ல. அதை ஏதோ தமிழகத்துக்கு இரண்டகம் செய்வதைப் போல கருதிக்கொண்டு அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர வாய்ப்பளிக்க மறுப்பது நியாயம் அல்ல. அது காலப்போக்கில் தமிழத்துக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


தமிழகத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 600 மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று மருத்துவம் பயில்கிறார்கள். அதேபோல், சில நூறு பேர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவப்படிப்பு படிக்கின்றனர். தமிழகத்தில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான், தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில முடியும் என்ற நிலை ஏற்பட்டால், வருங்காலங்களில் எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள்; அவர்களும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே இளநிலை மருத்துவம் படிக்க போட்டியிட்டால் போட்டி கடுமையாகும். நிறைவில், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 1000 வரை குறையும். இது தமிழகத்துக்கு தான் பாதிப்பு.


மீண்டும் சொல்கிறேன்... தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர முடியும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னால் உள்ள நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், அதுவே தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த விதியை, தமிழக கல்லூரிகளில் படித்த மாணவர்கள் என்பதற்கு மாற்றாக, தமிழக மாணவர்கள் என்று மாற்றினால் கூடுதல் பயன் கிடைக்கும். எனவே, அந்த விதியைத் தளர்த்தி பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்த தமிழக மாணவர்களும் தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவம் பயில தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்தில் முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயம்கோப்புப்படம்

சென்னை: முதுநிலை படிப்பை முடித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,100 எம்டி, எம்எஸ் படிப்புகள் உள்ளன. அதில் 1,050 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 1,050 இடங்களில் 50 சதவீத இடங்கள் தொலைதூர கிராமப்புற மற்றும் மலை பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. 525 இடங்கள் இளநிலை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்பில் 2023–24 கல்வியாண்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவோர், முதுநிலை படிப்பை முடித்தபின், 5 ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:

அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள், படிப்பை முடித்த பிறகு, தனியாகவோ, தனியார் மருத்துவமனைகள் அல்லது வெளிநாடுகளுக்கோ பணியாற்ற செல்கின்றனர். அவர்களுக்கு அரசு ஒதுக்கிய இடங்கள் மற்றும் செலவு செய்த பணம் வீணாகிறது. இவற்றை தடுக்க முதுநிலை படிப்பை முடித்தபின் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என விதி இருந்தது.

இது, இந்த ஆண்டு முதல் 5 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணியாற்ற விரும்பாத டிப்ளமோ முதுநிலை மாணவர்கள், ரூ.20 லட்சமும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.40 லட்சமும் செலுத்திவிட்டு தாங்கள் விரும்பும் பணிக்கு செல்லலாம். இல்லையென்றால் சான்றிதழ் வழங்கப்படாது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024