Thursday, July 13, 2023

ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!


ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!

13.07.2023

புது தில்லி: உலகம் எத்தனை மாறினாலும், இன்னமும் ஆண் குழந்தைக்கே இந்தியர்கள் ஆசைப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிகலந்த ஆராய்ச்சி முடிவு வெளியாகியிருக்கிறது.

நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் குடியரசுத் தலைவர் பதவியை பெண்கள் அடைந்த போதிலும், மக்களின் மனங்களில் மகன் தேவை என்ற அந்த ஒரு குணாதிசயம் மாறவேயில்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன. இந்திய கொள்கை முகமையில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வயதான முதியவர்களுக்கு அவர்களது மகன் பொருளாதார ரீதியாக ஆதரவு அளிப்பார் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நாட்டில் உள்ள முதியவர்களுக்கு பொது ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறது. இதையும் படிக்க.. இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு: நாமக்கல் ஆட்சியர் வேதனை!

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் பொது விவகாரத் துறை பேராசிரியர் சீமா ஜெயச்சந்திரன், பள்ளிகள் மூலம் பெண் குழந்தைகளுக்கு போதுமான சுகாதார அடிப்படை சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதை வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்திய குடும்பங்களில் மகள்களை விடவும், மகன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பாங்கு ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறுபட்டிருக்கிறதே தவிர மறையவில்லை என்கிறார். அதாவது, ஆண் பிள்ளைகளுக்காக செய்யப்படும் முதலீடு என்பது, அவர்களுடன் பிறந்த பெண் பிள்ளைகளிடமிருந்து வேறுபடுகிறது என்பதாகவே அது உள்ளது. ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற விருப்பம் - ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் முக்கியத்துவம் - போன்றவை இதுபோன்ற பாலின வேறுபாடுகளுக்கு இட்டுச்செல்கின்றன என்கிறார்.

தற்போது, சுருங்கி வரும் குடும்பங்களில், ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற விருப்பம் மகன் தேவை என்ற விருப்பத்தை அதிகரித்து, பாலின தேர்வை மையப்படுத்தும் வகையில் அமைந்துவிடுகிறது எனவும் ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில், மகன் பிறக்க வேண்டும் என்ற வேட்கை, பெற்றோருக்கு ஏற்படும்போது, அது மறைமுகமாகவும் நேரடியாகவும், அப்பெற்றோருக்கு இருக்கும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முதலில் பெண் குழந்தை பிறந்ததும், அடுத்து ஆண் குழந்தைக்காக உடனடியாக தாய் கருவுறும்போது, முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பது நிறுத்தப்படுவது முதல் தொடர்ச்சியான பல பாதிப்புகள் நேரிடுகின்றன. அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வந்து, குடும்பங்களில் மகன்களின் மீதான ஆர்வத்தைக் குறைப்பது என்பது மிகப்பெரிய சவால் என்றும் சீமா ஜெயச்சந்திரன் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

முதுமையில், மகன்தான் பெற்றோரை பாதுகாப்பான் என்ற மனப்பான்மை, வாரிசு, தலைமுறை, மகள் வீட்டில் பெற்றோர் இருப்பது அவமரியாதை போன்ற பல்வேறு சமுதாயச் சிக்கல்கள் மெல்ல உடைபட்டு வந்தாலும், பொதுவான கண்ணோட்டம் காரணமாகவே இந்தியர்கள் மகன்கள் மீது தீரா ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் மகன் காப்பாற்றுவான், மகள் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்ற சமுதாயக் கட்டமைப்பும் ஆண் குழந்தை வேண்டும் என்று இந்தியர்கள் அதிகம் ஆசைப்படுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு மகனின் பெற்றோர் அடையும் சலுகைகளை, மகளின் பெற்றோரும் அடையும் வகையில், கொள்கைகளை மாற்றுவது, முதியவர்களுக்கு பொதுவான ஓய்வூதியம், முதியவர்களுக்கு இலவச மருத்துவம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது நிச்சயம் பாலின சமத்துவத்தை மக்கள் மனங்களிலும் கொண்டு வர உதவலாம் என்றே கருதப்படுகிறது.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024