டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 83 பேரின் விடைத்தாள்களையும் மத்திய பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் ஆய்வுக்காக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு
கடந்த 2001–2002 ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி நடராஜன் என்பவர் கடந்த 2005–ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும் உடனடியாக அவர்கள் வகித்து வரும் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்த 83 அதிகாரிகளும் பதவியில் நீடிக்கலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
மேல்முறையீட்டு மனு விசாரணை
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்.
அவர் தனது வாதத்தில் கூறியதாவது:–
பழிவாங்க கூடாது
தேர்வு செய்யப்பட்ட இந்த அதிகாரிகள் தேர்வின் போது விடைகளை குறிக்க வண்ணப்பென்சில்களை உபயோகப்படுத்தினார்கள் என்று கூறுவது தவறு. அவர்கள் தங்களின் விடைகளைக் குறிக்க விடைத்தாள்களில் சாதாரண பென்சில்களைத்தான் பயன்படுத்தினார்கள். உயர்நீதிமன்றம் அமைத்த இருவர் குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
தேர்வில் விடையை எழுதும் போது பொதுவாக அடிக்கோடிட்டு காட்டுவார்கள். சொல்லப்போனால் இந்தத் தேர்வை எதிர்த்து இருக்கும் மனுதாரரும் தன்னுடைய விடைத்தாளில் அப்படியேதான் செய்திருக்கிறார்.
இந்த தேர்வின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருக்கின்றனர். அவர்களில் பலரும் 45 வயதைக் கடந்ததால் அவர்களுக்கு வேறு இடங்களில் அரசு பணிகளில் வேலை வாய்ப்பும் கிடைக்காது. இவை போன்ற சாதாரண குறைபாடுகளைக் காரணம் காட்டி இந்த அதிகாரிகளை பழிவாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே நீதிமன்றம் தங்கள் முந்தைய உத்தரவை திருத்தி அமைக்க கோருகிறோம். இந்த வழக்கு முடியும் வரை இந்த அதிகாரிகளை நீக்கம் செய்த முந்தைய உத்தரவின் மீது இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறான வழிமுறைகள்
மனுதாரர்களின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் தன்னுடைய வாதத்தில் ‘டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் பலரும் விதிமுறைகளுக்கு மாறாக வண்ணப் பென்சில்களை உபயோகித்தும் சில இடங்களில் அடிக்கோடிட்டும் தவறான வழிமுறைகளில் தங்கள் விடைத்தாளில் முயற்சித்துள்ளனர். இது மிகவும் தவறானது. எனவே விடைத்தாள்கள் அனைத்தையும் கட்டாயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யும்போது பலவிதமான விதிமீறல்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்’ என்றும் வாதாடினார்.
விடைத்தாள்களை ஒப்படைக்க உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குறிப்பிட்ட இந்த தேர்வு தொடர்பான அனைத்து விடைத்தாள்களையும் ( 83 பேரின் 800 விடைத்தாள்கள்) உடனடியாக ‘சீல்’ வைத்த உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விடைத்தாள்களை மத்திய பணித் தேர்வு ஆணையம் தீர ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான விசாரணையில் யூபிஎஸ்சி ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பவேண்டும். இந்த வழக்கு அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 22–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.A