Sunday, November 16, 2014

இரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு

சென்னை: இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.


விவாகரத்து:


இறந்த பழனிசாமிக்கு, மகுடேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. குடும்ப பென்ஷன் மற்றும் இதர பலன்களை வழங்கக் கோரி, மகுடேஸ்வரி, விண்ணப்பித்தார்.


ஈரோட்டில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர், 'பழனிசாமியுடன் மகுடேஸ்வரிக்கு திருமணம் நடந்த போது, பழனிசாமியின் முதல் திருமணம் ரத்தாகி இருக்கவில்லை; எனவே, பென்ஷன் பெற, மகுடேஸ்வரிக்கு உரிமையில்லை' என, உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மகுடேஸ்வரி, தாக்கல் செய்த மனு: கடந்த, 1984ல், ஈஸ்வரி என்பவரை, என் கணவர் பழனிசாமி, திருமணம் செய்தார். பாரம்பரிய வழக்கப்படி, 1990ல், ஈஸ்வரியை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின், 1991ல், என்னை திருமணம் செய்தார். தாராபுரம் நீதிமன்றம், விவாகரத்து வழங்கி, 1992ல், உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, என் கணவருக்கு உரிய பென்ஷன் மற்றும் இதர பணிப் பலன்களை, எனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சரவணன் ஆஜராகி, ஈஸ்வரி அளித்த உத்தரவாதத்தையும், போக்குவரத்து கழகம் அளித்த அடையாள அட்டையையும் தாக்கல் செய்தார். உத்தரவாத கடிதத்தில், தனக்கும், பழனிசாமிக்கும், 1990ல், திருமண உறவு முறிந்து விட்டதாகவும், மகுடேஸ்வரிக்கு பென்ஷன் பலன்களை அளிப்பதில், தனக்கு ஆட்சேபனையில்லை என்றும், கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவு: போக்குவரத்து கழகம் வழங்கிய, அடையாள அட்டையில், பழனிசாமி, மகுடேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளன. மகுடேஸ்வரியை, பழனிசாமியின் மனைவி என, குறிப்பிட்டு உள்ளனர்.

உத்தரவாதம்:

எனவே, பழனிசாமியின் மனைவி மகுடேஸ்வரியை, சட்டப்பூர்வ மனைவியாக அங்கீகரிக்க முடியாது என, போக்குவரத்து கழக நிர்வாகம் கூறுவது சரியல்ல. மகுடேஸ்வரியை மனைவி என குறிப்பிட்டு, அடையாள அட்டை வழங்கி விட்டு, வேறு நிலையை எடுக்க முடியாது. தனக்கும், பழனிசாமிக்கும் திருமண உறவு ரத்தாகி விட்டது என, ஈஸ்வரியும் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே, போக்குவரத்து கழக உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. எட்டு வாரங்களில், மனுதாரருக்கு, கணவரின் பென்ஷன் பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024