நரேந்திர மோடி பதவியேற்கும் முன்பு அவருக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு கசப்பான உணர்வுதான் இருந்தது. அவர் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற வகையில், அவருக்கு அமெரிக்கா விசா ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் இந்த விசா மறுக்கப்பட்டிருந்தது. அப்போதும் நரேந்திர மோடி சாதாரண குடிமகன் அல்ல. குஜராத் மாநில முதல்–மந்திரி. இந்த நிலையில், தேர்தல் நேரத்தின்போது, மோடிதான் பிரதமர் என்று ஒரு நிச்சயமான நம்பிக்கை நாட்டு மக்களுக்கு இருந்த நேரத்திலும், அப்படி மோடி பிரதமரானால், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் நல்லுறவு இருக்காதோ? என்ற எண்ணமும் மக்களுக்கு இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பே அமெரிக்கா அவருடைய விசா ரத்து என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதுவே உறவு மாற்றத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.
சமீபத்தில் மியான்மர் நாட்டில் நடந்த ‘ஜி 20’ நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கலந்துகொண்டனர். அந்த நேரத்தில், ஒபாமாவிடம், மோடி ஜனவரி 26–ந்தேதி டெல்லியில் நடக்கும் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் வார்த்தையிலான அழைப்போடு விட்டுவிடாமல், இந்தியா திரும்பியதும் அரசு ரீதியான கடிதத்தையும் அனுப்பி அழைப்பு விடுத்தார். ஒபாமாவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். இந்த தகவலை சமூக வலைதளத்தை அதிகமாக தன் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்தும் மோடி, தனது டுவிட்டரில் நாட்டு மக்கள் அனைவருக்கும் செய்தியாக அனுப்பினார். குடியரசு தினவிழாவில் ஒரு நண்பர் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக தலைமை விருந்தினராக வந்து சிறப்பிக்கவேண்டும் என்று அழைத்து இருக்கிறோம் என்று டுவிட்டரில் செய்தி அனுப்பிய அடுத்த சில நிமிடங்களில், வெள்ளை மாளிகை டுவிட்டர் செய்தி ஒபாமாவின் வருகையை உறுதிப்படுத்தி, இந்திய–அமெரிக்க உறவை வலுப்படுத்தவும், விரிவாக்கவும் ஒபாமா, இந்திய பிரதமர், அதிகாரிகளை சந்திப்பார் என்றும் தெரிவித்திருந்தது.
1959 முதல் இன்றுவரை 5 அமெரிக்க ஜனாதிபதிகள் இந்தியாவுக்கு வந்திருந்தாலும், குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான். எப்படி ராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவரும் முன்பு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டாரோ, அதுபோல ஒபாமா குடியரசு தினவிழவில் கலந்துகொள்ளும் செய்தியை அறிவிக்கும் முன்பு, நீண்டகாலமாக அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் இருக்கும் 5 லட்சம் இந்திய மக்கள் குடியுரிமை பெறும் வகையிலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உறவில் இவர்கள்தான் என்று இல்லாமல், அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துவரும் நரேந்திர மோடி, ராஜதந்திரத்துடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு காண்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஒபாமாவை, இந்தியா வரவேற்கிறது. புதியதோர் உலகம் படைப்போம்.
No comments:
Post a Comment