இன்று தமிழகத்தில் விவசாயத்தைவிட குடிதண்ணீர் தேவைதான் அதிகம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்காக இவ்வளவு யோசித்தது இல்லை. பின் ஏன் இப்பொழுது மட்டும் இவ்வளவு பிரச்னை? முன்பைவிட தற்சமயம் மக்கள்தொகை அதிகமாகிவிட்டது, கிராமத்தவர்கள் அதிகம் நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டனர், மழை முன்பு போல் அதிகம் பொழிவது இல்லை என கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருந்து கொண்டிருக்கின்றோம். நாம் எங்கே மழையை பெய்ய விட்டோம்? எல்லா வழிவகைகளையும் அடைத்துவிட்டோம். முன்பு தெய்வத்தை வேண்டினால் மழை பொழியவும், வேண்டாமென்றால் மழையை நிறுத்தவும் நமக்கு நிறைய கதைகள் சொல்லித் தருகின்றன.
அப்படியானால் இப்பொழுது மழை வேண்டும் என்று நினைத்தால் மழை பெய்யுமா? பெய்யும். ஆனால், நாம்தான் மழையை வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டோமே. நாட்டில் உள்ள அனைத்து காடுகளையும் மொட்டையாக்கி அழித்து விட்டோம். நவீன தொழிற்சாலைகள் வேண்டுமெனக்கூறி வான்வெளி பிரபஞ்சத்தையே, கரிய புகை மண்டலமாக்கி விட்டோம். போக்குவரத்து என்ற பெயரில் வாகனங்கள் விடும் புகையோ சொல்லி மாளாது.
பட்டாசு ஆலைகள் விடும் புகையால், நம் பூமி கந்தக பூமியாக வெந்து விட்டது. சரி இவைதான் இப்படி உள்ளது, பக்கத்து மாநிலங்களின் வீணாகி போகும் தண்ணீரைக்கூட குடிப்பதற்கு நமக்கு குடுத்து வைக்கவில்லை.நம் கைதான் நமக்குதவும் என்று நாம் முடிவெடுத்தால்தான் முடியும். அதாவது விவசாயத்திற்கு பல ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் தேவை, ஆனால் நாம் உழவுத்தொழிலில் இறவை பாசனமுறைகளை சுத்தமாக நிறுத்திக் கொண்டோம். ஏன்? நமக்கு தேவையான தண்ணீர் இல்லை என்பதால்தான். பெய்யும் மழைநீரை நமக்கு முன்பாகவே, இந்த சீமை வேலி கருவேல முள்(செடிகள்) மரங்கள் உறிஞ்சிக் கொள்கிறதே, பின் எப்படி நாம் விவசாயம் செய்ய முடியும்? சாதாரணமாக வேலிக் கருவேல மரங்கள் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் தற்பொழுது தமிழகமெங்கும் வியாபித்து செழிப்போடு வளர்ந்து நிற்கிறது. தமிழ்நாடு மொத்தம் எத்தனை ஏக்கர், எத்தனை சதுரமீட்டர் என்ற கணக்குப்படி பார்த்தால் அத்தனை எண்ணிக்கை உள்ள மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. வேளாண் நிலங்களும் புறம்போக்கு நிலங்களும், ஏரி, குளம், ஓடை, கண்மாய், ஆறுகள் எனவும் இப்பொழுது கிராமங்கள், நகரங்கள் என அதன் சுற்றுப்புறத்திலும் வீதிகளை கூட ஆக்கிரமித்தும், தூரத்தில் இருந்து பார்த்தால் அந்த ஊரே கண்ணுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வனத்திற்குள் ஊர் இருப்பது போல்தான் நாம் பார்க்க முடிகிறது. இந்த மரத்தின் குணாதிசயம் என்னவென்றால், அதன் அடிவேர்கள் நாலாபுறமும் சுமார் 300 மீட்டருக்கும் மேல் பூமிக்கடியில் நீண்டு வளரக்கூடிய தன்மை உடையவை.
உலகத்தில் உள்ள மரங்களின் நிழல்களிலேயே மிக வெப்பமானது புளியமரம்தான். ஆனால், அதைவிட ஆயிரமடங்கு வெப்பத்தன்மை கொண்டது இந்த வேலிக்கருவேல மரங்கள். இப்பொழுது அதன் தண்ணீர் செலவைப் பார்ப்போம். ஒரு மரம் ஒரு ஆண்டிற்கு 500 கனஅடி தண்ணீரை மிக எளிதாக உறிஞ்சக்கூடிய தாவரமாகும். இந்த தாவரத்தின் தேவைக்கு ஏற்ப மழை கூட பெய்யவில்லை. எனவே அதற்கேற்ப நீர் கிடைக்காத போது அது பூமியின் அதாவது பாறைவரை உள்ள மண்ணின் நீர்சத்தை எல்லாம் உறிஞ்சி மண்வளத்தையும் மலடாக்கிவிட்டது. பூமித்தாய் உலர்ந்து வெப்பமாகி, மலடாகி கிடக்கின்ற வேளையில் இந்த தாவரம் தனக்குத் தேவையான நீர்சத்து பூமியில் இல்லாததால் தன் கிளை, இலைகளால் வான்வெளியில் உள்ள ஈரக்காற்றை எல்லாம் உறிஞ்சிவிட்டது. இனி அடுத்த சந்ததியினருக்காவது மழை பொழிவதற்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா? இந்த பூமியையும் வான்வெளியையும் காப்பாற்றுவது நம் கடமையல்லவா? இதற்கு முதலில் தமிழகமெங்கும் ஆக்கிரமித்துள்ள இந்த வேலி கருவேல முட்செடிகளை அகற்ற வேண்டும். பாழ்பாட்டுப்போன விவசாயத்தை சீர்தூக்கி நிறுத்த வேண்டுமென்றால் இந்த முட்தாவரத்தை ஒழித்தே ஆக வேண்டும்.
No comments:
Post a Comment