Sunday, November 23, 2014

வாழ்க்கை வாழ்வதற்குத்தானே தவிர விபத்தில் தொலைப்பதற்கு அல்லவே..!

திர்பாராத நேரத்தில் நடக்கும் சாலை விபத்துதான் ஒருவரின் வாழ்க்கையை திக்குத்தெரியாமல் திசைமாற்றிவிடுகிறது. கை இழந்து, கால் ஒடிந்து என்று விபத்தில் சிக்கி மீண்டவர்களைக் கேட்டால், அந்தக் கோரத்தின் வலி புரியும். 

அந்தப் பாதிப்பில் இருந்து மீளாமல் இருப்பவர்களும் ஏராளம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

2011-ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 15,422 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 2012-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 16,175 ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிகையும் பலி எண்ணிக்கையும் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று அதிர வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடைபெறுகிறது. முக்கியமாக 70 சதவிகித விபத்துகள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகிறது.

விபத்து நடப்பதற்கு சூழ்நிலை மட்டுமே காரணம் இல்லை. மனம் மற்றும் உடல்நிலையும் முக்கிய காரணம். பெரும்பாலான விபத்துக்கு அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்றவையும் முக்கியக் காரணங்கள்.
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் ஏற்படும் கவனச் சிதறல் இன்னொரு முக்கியக் காரணம். விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன். எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் அடுத்த ஐந்து நொடிகளுக்கு நம் கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளியே போதுமானதாக இருக்கிறது.

விபத்தை தவிர்க்க முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விதிகள்

* விபத்தில் பெரும்பாலும் ஆண்கள்தான் சிக்கி கொள்கிறார்கள். பெண்களுக்கு எப்போதுமே பொறுப்பும், எச்சரிக்கை உணர்வும் இருப்பதால் அவர்கள் அதிகம் விபத்தில் சிக்குவதில்லை. தான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்ஸிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர் ஆண்கள். சாலைகளில் வாகனம் ஓட்டும்போது ரேஸ் மனப்பான்மையை தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதிலும் கவனம் தேவை.

* விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலை காயத்துடன்தான் வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதன்மூலம் விபத்து ஏற்படும்போது, அதன் தாக்கம் 40 சதவிகிதம் அளவுக்குக் குறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.

அடிக்கடி ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்தியபடியே பிரேக்கைப் பிடிக்கக்கூடாது. இதனால் வண்டி ஒரு பக்கமாக விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கலாம். வளைவுகளில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, நிதானம் தேவை.

* வண்டியை எடுக்கும்போது ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
* உடல் நலக்குறைவு இருக்கும்போது வண்டியை ஓட்டாமல் இருப்பதே நல்லது. சிலர், வீட்டிலேயோ அலுவலகத்திலேயோ ஏற்படும் பிரச்னைகளுடன் கோபமாக வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் 'அட்ரினல் ஹார்மோன்’ அதிகமாகச் சுரக்கும். இதனால் படபடப்பு ஏற்பட்டு விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மனக் குழப்பத்துடன் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
வண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது.
வாழ்க்கை வாழ்வதற்குத்தானே தவிர விபத்தில் தொலைப்பதற்கு அல்லவே..!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...