சினிமாவில் தான் சம்பாதித்ததை ஆடம்பரமாக வீண் செலவு செய்யாமல், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். சென்னை நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் ஒன்பதரை கிரவுண்டு இடம் வாங்கி, அதில் பங்களா கட்டி, தன் ரசிகர்கள் அனைவரையும் அழைத்து, கிரகப்பிரவேசம் செய்தார்.
புதுமனை விழாவிற்கு காமராஜர், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி வந்து வாழ்த்தினர். தற்போது, இந்த பங்களாவின் பின்புறம், அவரின் மகள் டாக்டர் கமலாவின் ஜி.ஜி.மருத்துவமனை உள்ளது.
இதே போன்று ஒருமுறை, பாசமலர் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்ற ஜெமினி, 'ரெட்லிஞ்ச்' என்ற பெயரில், நான்கு ஏக்கர் பரப்பளவில், தோட்டத்தோடு கூடிய விஸ்தாரமான பெரிய பங்களாவை பார்த்தார். அதன் அழகில் மயங்கியவர், அதுக் குறித்து விசாரித்தார். அது, இங்கிலாந்தில் வசிக்கும் பிரபல மதுபான தயாரிப்பாளரான ஹேவார்ட்ஸ் என்பவருக்கு சொந்தமானது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர் வாங்கிப் போட்டிருந்த பங்களாவை, இந்தியா விடுதலை அடைந்ததும், ஒருவரின் நிர்வாக பொறுப்பில் விட்டு, இங்கிலாந்து சென்று விட்டார். அந்த பங்களாவை விற்கப் போவதாக அறிந்த ஜெமினி, அதை எப்படியும் வாங்கி விட முடிவு செய்தார்.
கருமுத்து தியாகராஜ செட்டியார், டி.வி.எஸ்., நிறுவனத்தார் அந்த பங்களாவை வாங்க முயல்வதாக கேள்விப்பட்டார். தியாகராஜ செட்டியார், ஹேவார்ட்சுக்கு நெருக்கமான நண்பர் என ஜெமினிக்கு தெரியும். அதனால், பங்களாவை தியாகராஜ செட்டியாருக்கு விற்றுவிடுவாரோ என்ற பயம் ஜெமினிக்கு இருந்தது. அதனால், சமயோசிதமாக ஒரு திட்டத்துடன் தியாகராஜ செட்டியாரை சந்தித்து, 'கொடைக்கானலில் எனக்கு ஒரு நல்ல பங்களா வாங்க வேண்டும்...' எனச் சொன்னவுடன், 'அதற்கென்ன ஏற்பாடு செய்துட்டா போச்சு...' என்றார் செட்டியார். உடனே, 'உங்க நண்பர் ஹேவார்ட்ஸ் தன்னுடைய ரெட்லிஞ்ச் பங்களாவை விற்கப் போவதாக கேள்விப்பட்டேன்; அதை, விலை பேச நீங்க தான் ஏற்பாடு செய்யணும்...' என்றார்.
ஜெமினி இப்படி உதவி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை தியாகராஜ செட்டியார். அதனால், அவர், 'நானே வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; இப்ப நீங்க விரும்புறதால கண்டிப்பா ஏற்பாடு செய்கிறேன்...' என்று கூறி, ஹேவார்ட்சுக்கு கடிதம் எழுதவும் செய்தார்.
ஆனால், தியாகராஜ செட்டியாரிடம் கேட்டுக் கொண்டு விட்டோமே என அசால்டாக இல்லாமல், ஜெமினியும் தன் பங்கிற்கு ஹேவார்ட்சுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதம்:
திரு ஹேவார்ட்ஸ் அவர்களுக்கு, கொடைக்கானல் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த போது, உங்கள் ரெட்லிஞ்ச் பங்களாவை பார்த்தேன். அதை நீங்கள் விற்க இருப்பதாக கேள்விப்பட்டேன். என் மனதில் பதிந்து விட்ட அந்த பங்களாவை நானே வாங்க ஆசைப்படுகிறேன்; நீங்கள் விற்கும் பட்சத்தில் எனக்கே கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
ஜெமினி கணேசன்.
அதோடு நிற்காமல், பின்குறிப்பாக, 'இவ்வளவு அழகான பங்களாவை விற்க உங்களுக்கு எப்படி மனது வந்தது? உங்களிடத்தில் நானிருந்தால் கை நழுவி போக விடவே மாட்டேன்...' என்று எழுதியிருந்தார்.
சில நாட்களுக்கு பின், விற்பனைக்கு பொறுப்பேற்றிருந்த ஜப்பார் என்பவரை பார்க்க சென்றார் ஜெமினி. 'நீங்கள் தான் ஜெமினி கணேசனா...' என்று கேட்டு, 'என்ன விலை கொடுப்பதாக இருக்கிறீர்கள்...' என்று கேட்டார் ஜப்பார்.
'நீங்கள் மூன்று லட்சம் சொல்வதாக கேள்விப்பட்டேன்; இதுவரை அதிகபட்சமாக கூறப்பட்ட விலையை சொன்னால் நான், என் விலையை கூறுகிறேன்...' என்று, அவர் பக்கமே கேள்வியை திருப்பினார்.
அவர் சிரித்தபடி, 'ஒரு லட்சம்...' என்றார்.
உடனே ஜெமினி, 'என் விலை ஒரு லட்சத்து பத்தாயிரம்...' என்று கூறியவுடன், அவர் ஜெமினியின் கையை குலுக்கியபடி, 'பங்களாவை உங்களுக்கே கொடுக்க முடிவு செய்து விட்டேன்...' என்றார். உடனே பத்தாயிரம் ரூபாய் காசோலையை முன் பணமாக கொடுத்து விட்டார் ஜெமினி.
அதை வாங்கிக் கொண்டவர், புன்னகையுடன் ஜெமினியிடம் ஒரு தந்தியை காண்பித்தார். அது, ஹேவார்ட்ஸ் அனுப்பியது.
அதில், 'என்ன விலை கொடுத்தாலும் பங்களாவை, நடிகர் ஜெமினி கணேசனுக்கே கொடுத்து விடுங்கள்...' என்று இருந்தது. அதை படித்த ஜெமினி, ஆச்சரியத்திலிருந்து மீள்வதற்குள், காசோலையை காட்டி, 'இந்த பத்தாயிரத்துக்கே கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்; நான் ஒரு வியாபாரி. அதனால் தான் விலை பேசிய பின், தந்தியை காட்டினேன்...' என்றார்.
ஜெமினி வாயடைத்து போனார்.
இது, 1961ல் நடந்தது. இன்று அந்த பங்களா, பல நூறு கோடி ரூபாய் பெறும். கொடைக்கானல் வரும் சுற்றுலாவாசிகள் மற்றும் ரசிகர்கள் இந்த பங்களாவை, 'ஜெமினி பங்களா' என்று ஆர்வமாக நின்று பார்த்து செல்வதை, இன்றும் காணலாம்.
* 'தவறு செய்யாத மனிதர்களே கிடையாது; ஆனால், தன் தவறை மறைக்காமல் நேரிடையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல்காரர் என் அப்பா...' என்று, ஜெமினி - சாவித்திரி மகன் சதீஷ், பெருமையுடன் கூறுகிறார்.
* விடியற்காலை, 4:30 மணிக்கு எழுந்து, தானே சமையலறை சென்று, காபி போடும் ஒரு சராசரி குடும்பத்தலைவராக திகழ்ந்தார்.
* காய்கறிகளை பொறுக்கி வாங்குவதிலிருந்து, அதை நறுக்கி சமைக்கவும் தெரிந்தவர்.
* எதையும் வித்தியாசமாக ஆராய்பவர்; ராமாயணத்தை, ராவணன் கோணத்தில் நின்று சிந்திக்கும் மனிதர்.
* 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்...' என்று அடிக்கடி கூறுவார்.
* ஜெமினி சிறுவனாக இருக்கும் போது, பள்ளி நாடகத்தில் குட்டி கிருஷ்ணன் வேடத்தில் பாடி, நடித்தாராம். 'அன்று, குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை, நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்து விட்டது விதி...' என்று கூறிய ஜெமினி, 'காதல் மன்னன் என்ற பட்டப்பெயரை கேட்டாலே, மனதில் வெறுப்பு வருகிறது...' என்பார்.
மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
No comments:
Post a Comment