Thursday, November 20, 2014

சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1–ந் தேதி முதல் சமையல் கியாசுக்கு வங்கிகள் மூலம் நேரடி மானியம் ஆதார், வங்கி கணக்கு எண் வழங்க கியாஸ் நிறுவனங்கள் வேண்டுகோள்



சமையல் சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1–ந் தேதி முதல் சமையல் கியாசுக்கு வங்கிகள் மூலம் நேரடி மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் வழங்க வேண்டும் என்று கியாஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சமையல் சிலிண்டர்கள்

வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை தடுக்கவும், அதிக விலைக்கு விற்பனை உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதன்படி சிலிண்டர்களுக்கான மானிய தொகையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆதார் அடையாள அட்டை இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2013–ம் ஆண்டு நேரடி மானிய திட்டத்தை மன்மோகன்சிங் அரசு அறிமுகப்படுத்தியது.

மோடி தலைமையிலான புதிய அரசு இத்திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வந்தது. ஆதார் அட்டை கட்டாயம் அல்ல. ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதன்படி புதிய திட்டம் கடந்த 15–ந் தேதி முதல் மேலும் 54 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தபட்டது.

ஜனவரி 1–ந் தேதி

வரும் 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சமையல் கியாஸ் இணைப்பு வைத்து இருப்பவர்களின் செல்போனுக்கு கியாஸ் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறது. அதில், ‘‘சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை சமையல் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெற்றி செல்வகுமார் கூறியதாவது:–

அவகாசம்

சமையல் கியாஸ் மானிய தொகையை கியாஸ் இணைப்பு உள்ளவர்களின் பெயர்களிலேயே நேரடியாக மானியத்தை வங்கிகளில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் அட்டை எண் இருந்தால் அதனையும் வினியோகஸ்தர்களிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியத்தை கழித்து வழக்கமான முறையில் ரூ.404 செலுத்தி சிலிண்டர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும். அந்த காலத்தில் சமையல் கியாஸ் மானியம் தொகை கழிக்காமல் முழு தொகையான ரூ.950 செலுத்தி தான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. மாறாக முழு தொகை கொடுத்து தான் சிலிண்டர் வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2½ லட்சம் போலி இணைப்புகள்

தமிழகத்தில் 1 கோடியே 62 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஒருவர் பெயரிலேயே பல இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு 2½ லட்சம் போலி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நேரடி மானிய திட்டம் அமலுக்கு வரும் போது மேலும் 1½ லட்சம் போலி இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளது.

அதற்கு பிறகு நியாயமான முறையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்க வாய்ப்பு உள்ளது என்று ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024