கலைவாணர் பிறந்த நாள் !
நகைச்சுவையாலே நம் மனதில் தெம்பும் நம்பிக்கைச் சிந்தனையையும் விதைத்த கலைவாணரின் பிறந்த நாள் இன்று..!
என்.எஸ்.கிருஷ்ணன் ! பாகம் - 2
(ஆனந்த விகடன்)
என்.எஸ்.கே – மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!
'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்!
உடுமலை நாராயணகவியைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். உடுமலைக்கவியை கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.
1957 –ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர்.ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். "இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்" என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!
'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள். லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். "உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!" – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!
சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார்!
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே- பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், "எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!" என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!
"என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! "’ என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!
"எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, "இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்" என்றார்!
தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். "அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்" என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, "அவன் என்னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே" என்றாராம்!
கலைவாணர், காந்தி பக்தர் நாகர்கோவிலில் காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. "நாடகம், சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!" என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே. "பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!" என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
சேலம் அருகே தாராமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. "மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே! " என்றாராம்!
No comments:
Post a Comment