விளையாட்டு வினையாகிவிடும் என்பது பழமொழியாகத்தான் இருந்தது கடந்த 25ஆம் தேதிக்கு முன்னால் வரை...
அந்த நாளில் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரின் கிரிக்கெட் மைதானத்தில், 22 வயது இளம் வீரர் சீன் அபோட் தனது எல்லையிலிருந்து பந்தை எடுத்துக் கொண்டு ஓடத்தொடங்கும் போது கூட `இந்த பந்து சிக்சர் பறந்து விடுமோ` என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருக்கும்.
பந்து கையை விட்டு நழுவியதும் தரையில் பட்டு ஆளுயரம் எழுந்து பந்தை எதிர் கொண்ட பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸை நோக்கி செல்ல, கண் இமைக்கும் நேரத்தில் பந்து தலையில் தாக்கியதில் தரையில் மயங்கி விழுதார் பிபிப் ஹியூஸ்.
அந்த நிமிடம் முதல் ஒவ்வொரு நிமிடமும் கிரிக்கெட் உலகைத் தாண்டி அனைவரிடமும் பதட்டமும் பரபரப்பானதாகவும் மாறிப்போனது. தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தபோதும், தனது குடும்பத்தாரையும் ரசிகர்களையும் தவிக்க விட்டு. கோமா நிலையிலேயே மரணத்தைத் தழுவி உள்ளார் ஹியூஸ்.
பிலிப் ஹியூஸ் ஒரு நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். சிறுவயதில் ரக்பி வீரராக கலக்கிய பிலிப், கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்ததால் கிரிக்கெட் வீராரகவும் தன்னை வளர்த்து கொண்டார் தனது 17ஆவது வயதில் சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் 141 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய நாட்டின் தேர்வுக்குழுவினர் பார்வையும் பிலிப் மீது பட்டது.
உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வந்த ஹியூஸ் க்கு காத்திருந்தது 2009ஆம் ஆண்டு. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் போட்டியில் நான்காவது பந்திலேயே ஸ்டெயின் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த இன்னிங்க்ஸில் 75 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தாலும்,
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹியூஸின் ஆட்டம் வெளிப்பட தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 160 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய அணி 175 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுத்தார். ஆனால் ஆஷஸ் தொடரில் இடம் பெறுவார் என்ற போது இவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திப்பதில் சிரமம் உள்ளது என அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் 2011ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது சைமன் கேட்டிச் காயத்தால் வெளியேற மீண்டும் ஹியூஸிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சரியாக ஆடாததால் அணியில் இடம் பறிபோனது. பின்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இரண்டு சதமடித்து ஹியூஸ் தனது தேர்வை நியாயப்படுத்தினார்.
இடையே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அணியில் நான்கு வெளிநா ட்டு வீரர்கள்தான் இடம் பெற முடியும் என்பதால் பிலிப் ஹியூஸ் ஆடும் அணியில் இடம் பெறவில்லை.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடிய ஹியூஸ் 6 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் சீன் அபோட்டும் இவரோடு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அதில் ஹியூஸுக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு முன் தனது திறமையை நிரூபிக்க தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காகக் களமிறங்கினார். அப்போதுதான் இந்த மறக்கவியலாத சோக விபத்து நடந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபோட் வீசிய பந்து தலையை பதம் பார்த்தது. மயங்கி விழுந்த ஹியூஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 27ஆம் தேதி இறந்தார். இவரின் இழப்பு கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக மாறியது. இவருக்கு பந்து வீசிய சீன் அபோட் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் , முன்னாள்,இன்னாள் வீரர்களும் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஹியூஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர் பயன்படுத்திய ஹெல்மெட் சரியான பாதுகாப்பு வசதியுடன் இல்லை என்று கடுமையாக விவாதிக்கப் படுகிறது. ஹியூஸ் பழைய ஹெல்மெட் அணிந்திருந்தார் என்று ஹெல்மெட் கம்பெனி ஒரு வித்தியாச விளக்கம் கூறுகிறது. என்ன இருந்த போதும் இன்று ஹியூஸ் இல்லை.
கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசசாளரது மிகப்பெரிய ஆயுதம் பவுன்சர். அப்படி ஒரு பவுன்சர் பந்து தான் ஹியூஸை தாக்கியது. இந்த மரணத்தால் இனி எந்த வேகப்பந்து வீச்சாளரும் பவுன்சர் வீச பயப்படுவார். எந்த பேட்ஸ்மேனும் இனி ஹெல்மெட் அணியும் போது கண்டிப்பாக ஹியூஸை நினைப்பார். கிரிக்கெட் ஆட போகிறேன் என்று தெருவில் ஒரு சிறுவன் கிளம்பினாலும், அவனது பெற்றோர் ஹியூஸை நினைவுப்படுத்துவார்கள்.
ஹியூஸ் எனும் வீரன் மறைந்தாலும் அவன் இனி வருங்கால கிரிக்கெட்டைப் பாதுகாக்கும் பணியைச் சிறப்பாக செய்துவிட்டுச் சென்றுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் ஹியூஸின் மறைவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவே பதிவாகும்.
- ச.ஸ்ரீராம்
No comments:
Post a Comment