Friday, November 28, 2014

பக்தி என்னும் வணிகம்

மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியை உருவாக்கவே கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால், இப்போது கோயில்கள் அனைத்துமே வணிக மையங்களாக மாறி விட்டன. சிறப்புக் கட்டணம், மிகச் சிறப்புக் கட்டணம், பரிகார கட்டணம் என விதவிதமாக வசூலிக்கின்றனர்.

சிறப்பு தரிசனக் கட்டணத்திலும் நாளுக்கு நாள் மாற்றம் உண்டு. சாதாரண நாள்களில் ஒரு கட்டணம், விசேஷ நாள்களில் வேறு கட்டணம் என வசூலிக்கிறது அறநிலையத்துறை.

உதாரணமாக, பல பெருமாள் கோயில்களில் சாதாரண நாள்களில் தரிசனத்துக்கு ரூ.5 கட்டணம். அதுவே சனிக்கிழமைகளில் ரூ.10 ஆக உயர்ந்துவிடுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அது பல மடங்கு எகிறி ரூ.100 வரை செல்கிறது.

கார்த்திகை துவங்கி, தை வரை பக்தி சீசன் காலம். ஐயப்ப பக்தர்கள் வருகை அனைத்துக் கோயில்களிலும் அதிகமாக இருக்கும். இதைப் பயன்படுத்தி கல்லா கட்ட முனைந்துள்ளன கோயில் நிர்வாகங்கள்.

இப்போது தரிசன கட்டணத்தை பல

மடங்கு அதிகரித்துள்ளனர். அதாவது கூட்டத்தைப் பயன்படுத்தி வசூலை பெருக்கிக் கொள்கின்றனர். ஏறக்குறைய எல்லா கோயில்களிலும் இது தான் நிலை.

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் பெரும்பாலானவை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பல கோயில்களில் கோயில் நிர்வாகமே விளக்கு, அர்ச்சனை பொருள்

களையும் விற்கின்றன.

தஞ்சை மாவட்டத்து கோயில்களில் நெய் விளக்கு ரூ.2}க்கு விற்கப்படுகிறது. விளக்கின் அளவும் பெரிதாக உள்ளது. அதுவே திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.5}க்கு விற்கப்படுகிறது. விளக்கின் அளவு மிகவும் சிறியது. இப்படி பல விஷயங்கள்.

இதைத் தவிர, சில கோயில்கள் விதவிதமாக பரிகாரங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. பிரம்மாண்ட விக்கிரகங்கள், அந்த தோஷத்துக்கு பரிகாரம், இந்த தோஷத்துக்குப் பரிகாரம் என வசூலை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்குகின்றன. அங்கே செல்பவர்களின் பிரச்னை தீர்கிறதோ இல்லையோ பணம் கரைவது உறுதி.

இது ஒருபுறம் இருக்க, புதிது புதிதாக அமைப்புகள் உருவாகி வசூலித்து வருகின்றன. மதுரையில் சமீபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. 108 வைணவ தேசத்தையும் ஒரே இடத்தில் காணலாம் என்று கூறினர்.

எந்த அமைப்பு இந்த கண்காட்சியை நடத்துகிறது என்ற விவரம் எதுவும் இல்லை. நுழைவுக் கட்டணமாக ரூ.50 வசூலித்தனர். அது கூடப் பரவாயில்லை.

காலணி பாதுகாப்புக்கு ரூ.5 வசூலித்தது தான் கொடுமையிலும் கொடுமை. இதைத் தவிர, இருசக்கர வாகனத்துக்கு ரூ.10 கட்டணம். இந்த கண்காட்சி மூலம் அந்த நிறுவனம் நல்ல லாபம் பார்த்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் பல நகரத்தார் கோயில்கள் உள்ளன. சிங்கப்பூரை விட சுத்தமாக கோயில்கள் பராமரிக்கப்படுகின்றன. அந்தக் கோயில்களில் உண்டியலே இருக்காது.

திருப்பதி சென்று வந்தவர்களுக்குத் தெரியும்... இங்கு இருப்பது போன்று அங்கே கண்ட இடத்திலெல்லாம் உண்டியல் இருக்காது. கோயிலில் உள்புறத்தில் ஒரே இடத்தில் தான் உண்டியல் இருக்கும்.

சமீபகாலமாக பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கோயிலுக்கு வெளியே எதிர்புறத்தில் அனுமன் சன்னதி முன்பு ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி வரும் பக்தர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள் உலகில் எங்குமே கிடைக்காதது. மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் உடைமைகளைக் கொண்டு செல்ல இலவச வாகனம், மலையில் தங்குமிடங்களுக்குச் செல்ல இலவசப் பேருந்து, காலணி, கேமரா, செல்போன்களை வைக்க இலவச பாதுகாப்பிடம், தினமும் 18 மணி நேரம் இலவச அன்னதானம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், தமிழகக் கோயில்களில் அவ்வாறு எதுவும் இல்லை. காலணி பாதுகாப்பு இலவசம் என்று பெயர். ஆனால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் காசு வாங்காமல் விடுவதில்லை.

பக்தர்களிடம் பணம் வசூலித்துதான் ஆக வேண்டும் என்ற அளவுக்கு தமிழகக் கோயில்கள் ஒன்றும் ஏழைக் கோயில்கள் அல்ல. அனைத்துக் கோயில்களுக்கும் ஏராளமாக சொத்துக்கள் உள்ளன.

பேருந்துகளில் விரைவுப் பேருந்து, அதி விரைவுப் பேருந்து, இடை நில்லாப் பேருந்து, சொகுசுப் பேருந்து என விதவிதமாக அறிவித்து விதவிதமாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதுபோல விரைவு தரிசனம், சிறப்பு தரிசனம், அதிவிரைவு தரிசனம் என கோயில்களும் துவங்கிவிட்டன.

பக்தர்களிடமிருந்து எப்படியெல்லாம் பணம் பறிக்கலாம் எனத் திட்டமிடாமல், கோயில் சொத்துகளை மீட்பதில் அற நிலையத்துறை அக்கறை செலுத்த வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024