Tuesday, November 25, 2014

கையால் எழுதப்பட்ட, 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள் அடுத்த ஆண்டு முதல் செல்லாது

கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செல்லாது என்று சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி சி.செந்தில்பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து தினத்தந்தி நிருபரிடம், சென்னை மண்டல ‘பாஸ்போர்ட்’ அதிகாரி சி.செந்தில்பாண்டியன் கூறியதாவது:–

‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’கள்

வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்’ முறையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்து ‘பாஸ்போர்ட்’களை பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம். காரணம் ‘தட்கல்’ மூலம் விண்ணப்பித்தால் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்படுகிறது.

பின்னர் போலீஸ் விசாரணையில் ‘தட்கல்’ ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் தேவையில்லாமல் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனை தவிர்க்க சாதாரண வகையில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கலாம். ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 நாட்களிலும், சாதாரண வகையில் விண்ணப்பிப்பவர்களுக்கு 10 முதல் 15 நாட்களிலும் ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது.

காலஅவகாசம்


விசா விண்ணப்பிக்கும் போது குறைந்த பட்சம் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் காலம் 6 மாதங்களாவது இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கும் காலம் குறுகிய காலமாக இருந்தால் விசா வந்தும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படும் என்பதால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

கையால் எழுதப்பட்டவை


கடந்த 1995, 1996–ம் ஆண்டுகளில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில ‘பாஸ்போர்ட்’கள் புதுப்பிக்க 20 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ‘பாஸ்போர்ட்’களும் 2015–ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு செல்லாததாகும். எனவே இந்த இரண்டு வகை பாஸ்போர்டுகளையும் மாற்றித்தர வெளிவிவகாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கையால் எழுதப்பட்ட ‘பாஸ்போர்ட்’களை பெற்றுக்கொண்டு புதிதாக கணினி மூலம் தட்டச்சு செய்யப்பட்டும், 20 ஆண்டுகள் புதுப்பிக்கும் காலஅவகாசத்தை மாற்றி 10 ஆண்டுகளாக குறைத்தும் புதிய ‘பாஸ்போர்ட்’கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதுபோன்ற ‘பாஸ்போர்ட்’களை வைத்திருப்பவர்கள் கடைசி நேர கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக உடனடியாக மண்டல ‘பாஸ்போர்ட்’ அலுவலகத்துக்கு சென்றோ அல்லது ஆன்–லைனிலோ தங்கள் ‘பாஸ்போர்ட்’களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தற்காலிக முகவரியில்


நிரந்தர முகவரியில் வசிக்காமல், தற்காலிக முகவரியில் வசிப்பவர்கள் நிரந்தர முகவரியில் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது நிரந்தர முகவரியில் போலீஸ் விசாரணை செய்யும் போது விண்ணப்பதாரர் அங்கு இல்லாததால் ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக தற்காலிக முகவரியில் வசிப்பவர்கள், தற்காலிக முகவரியில் ஆவணங்களை பெற்றுக் கொண்டு அதன் மூலம் ‘பாஸ்போர்ட்’ கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் உடனடியாக ‘பாஸ்போர்ட்’கள் பெறுவதுடன், அபராதம் கட்டுவதையும் தவிர்க்கலாம்.

பாஸ்போர்ட் சேவா மையம்


சென்னையில் உள்ள மண்டல ‘பாஸ்போர்ட்’ அலுவலகத்தின் கீழ் சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய 5 இடங்களிலும் ‘பாஸ்போர்ட்’ சேவா மையம் செயல்படுகிறது. இதில் புதுச்சேரியில் உள்ள மையம் ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பம் வசூலிக்கும் மையமாக செயல்படுகிறது. இதனை விரைவில் மினி ‘பாஸ்போர்ட்’ சேவா மையமாக மாற்றுவதற்காக புதுச்சேரி அரசுடன் பேசி வருகிறோம். அத்துடன் நிலுவையில் உள்ள ‘பாஸ்போர்ட்’களை உடனுக்குடன் வழங்குவதற்காக குறைதீர்வு அமைப்பு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 சேவா மையங்களிலும் நடத்தப்பட்ட முகாமில் 1,600 முதல் 1,700 விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. அதேபோல் புதுச்சேரியல் நடத்தப்பட்ட ‘பாஸ்போர்ட்’ முகாமில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 262 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. தொடர்ந்து கடலூரில் நடந்த முகாமில் 325 பேர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 20 விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ‘பாஸ்போர்ட்’ வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

29–ந்தேதி சிறப்பு முகாம்


சென்னையில் உள்ள அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய 3 ‘பாஸ்போர்ட்’ சேவை மையங்களில் வரும் 29–ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் 60 வயதுக்கு மேலான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும். விடுமுறை நாளில் நடத்தப்படும் இந்த முகாமில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடனும், சிறுவர்கள் பெற்றோருடனும் கலந்து கொள்ளலாம். இவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

முகாமுக்கு வருபவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை பதிவு செய்துவிட்டு, இணையதளத்திலிருந்து பெறப்பட்ட நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். வரும் போது உண்மை ஆவணங்கள் மற்றும் நகல்களையும் எடுத்து வரவேண்டும். முகாம் நாளில் சாதாரண வகை விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மாறாக ‘தட்கல்’ முறை விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...