Tuesday, November 25, 2014

குடும்ப அட்டைகள் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு: அடுத்த மாதம் முதல் உள்தாள் ஒட்டப்படும்


குடும்ப அட்டைகளை புதுப்பிக்க, டிசம்பர் மாதம் கடைகளில் உள்தாள் இணைத்துக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடும்ப அட்டை

பொது விநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு போதுமான தரமான விலை இல்லா அரிசி அனைத்து கிடங்குகளிலும் சுமார் 3 மாத தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருள்களும் சீரான முறையில் விநியோகம் செய்வது உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

பொது விநியோக திட்ட கிடங்குகளிலிருந்து நியாயவிலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நகர்வு செய்யப்படுவதை கண்காணிக்கவும், கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பினை அறிந்து அவ்வப்போது தேவையான பொருள்களை நகர்வு செய்யவும், புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளை களையவும், இத்திட்டங்களை கணினி மயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி 5 கோடியே 87 ஆயிரத்து 395 நபர்களுக்கு உடற்கூறு பதிவுகள் (பயோ மெட்ரிக்ஸ்) கணினியில் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 நபர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.

உள்தாள் இணைப்பு

எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015-ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 1.1.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு ஆணையிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெறவரும்போது, அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015-ம் ஆண்டிற்கான உள்தாளினை இணைத்து வழங்குமாறும் உத்திரவிடப்பட்டுள்ளது. எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கலந்து கொண்டோர்

இது தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில், அரசு உணவுத்துறை முதன்மை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன், உணவுப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் கே.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் கே.நாகராஜன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024