Thursday, November 27, 2014

அவசரம், மிக மிக அவசியம்!

உலக நாடுகள் எல்லாம் "எபோலா' பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. வியர்வை பட்டால்கூடத் தொற்றிக் கொள்ளும் இந்த அபாயகரமான நோய் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டால் காட்டுத் தீ போலப் பரவும் என்பதில் சந்தேகமில்லை. ஆப்பிரிக்க நாடுகள் கட்டுப்படுத்தியதுபோல நம்மால் எபோலாவை எதிர்கொள்ள முடியுமா என்பது சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

26 வயது இளைஞர் ஒருவர் லைபீரியாவிலிருந்து தில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவராகவே முன்வந்து விமான நிலைய அதிகாரிகளிடம் தன்னை "எபோலா' தொற்றுநோய்க்கான பரிசோதனைக்கு உள்படுத்தும்படி கேட்டிருக்காவிட்டால், இந்தியாவுக்குள் "எபோலா' நுழைந்தது பற்றியே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்.

அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்தபோது, அதில் எபோலா விஷ நுண்ணுயிரிக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எதற்கும் பரிசோதிப்போமே என்று அவரது சிறுநீரையும், விந்தையும் சோதனை செய்தபோது, எபோலா நுண்ணுயிரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறையினர் அவரை உடனடி

யாகத் தனிமைப்படுத்தி, சிகிச்சையைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், பயணத்தின்போது சக பயணி யாரையாவது இவர் தொட்டிருக்கிறாரா, இவரது வியர்வை பட்டு யாருக்காவது "எபோலா' தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதுதான் இப்போதைய கவலை.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, "எபோலா' நுண்ணுயிரி பரவுவதைத் தடுத்திருக்கிறது. அதுபோல, இந்தியாவில் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். சந்தேகத்துக்கு இடமில்லாத கண்காணிப்பு, சோதனை, மருத்துவப் பரிசோதனை, தனிமைப்படுத்தும் வசதி போன்றவற்றை எல்லா மட்டத்திலும் உறுதிப்படுத்துவது என்பது இந்தியாவில் மிகமிகக் கடினம்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி "எபோலா' நுண்ணுயிரிப் பரிசோதனைக்கான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படியான வசதிகள், இந்தியாவிலுள்ள 14 விமான நிலையங்களில் இரண்டே இரண்டில்தான் காணப்படுகின்றன. கடந்த 21 நாள்களுக்கான பயணிகள் வருகைப் பட்டியலோ, அவர்களது உடல்நிலை பற்றிய தகவல்களோ சேகரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.

அதைவிட அச்சுறுத்தும் விஷயம், "எபோலா'வை எதிர்கொள்ள அடையாளம் காணப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பது. அங்கே பணிபுரியும் மருத்துவ சேவகர்கள் போதுமான பாதுகாப்புடன் இயங்குவதாகவும் தெரியவில்லை. ஆப்பிரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகள் மட்டுமல்ல, "எபோலா'வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும்கூட "எபோலா' நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டு, தொற்றுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள் என்பது அச்சுறுத்தும் உண்மை.

"எபோலா' நுண்ணுயிரிப் பரிசோதனைக்காக மேலும் 10 பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அதேபோல, "எபோலா'வைக் கண்டறிய "ஒருங்கிணைக்கப்பட்ட நோய் கண்காணிப்புத் திட்டம்' ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் டைபாயிடு, காலரா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற விஷக் காய்ச்சல்களுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்குமே தவிர, "எபோலா' போன்ற அதிபயங்கரத் தொற்றுநோய்க்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கையாகத் தெரியவில்லை.

உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டிய இடம் நமது விமான நிலையங்கள்தான். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரையும் முறையான சோதனைக்கு உள்படுத்தாமல் இந்தியாவுக்குள் அனுமதிப்பதே ஆபத்து. ஆனால், விமான நிலையங்களில் இன்னும்கூட முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

"எபோலா' என்பது நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரமான உயிர்க்கொல்லி நுண்ணுயிரி. குணப்படுத்தப்பட்ட பிறகும்கூடப் பல வாரங்கள் ரத்தத்தில் உயிர் வாழும் தன்மையுடையது. "எபோலா'வால் உயிரிழந்த சடலத்திலிருந்துகூட இந்த நுண்ணுயிரி பரவக்கூடும் என்கிறார்கள். இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள ஒரு நாட்டில், அதிலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில் "எபோலா' உயிர்க்கொல்லி ஆழிப்பேரலையாக மாறக்கூடும். நாம் அதைப் புரிந்து கொள்ளாமல், எரிமலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறோம்.

"எபோலா' நுழைந்து விட்டால், இந்தியா பேரழிவைச் சந்திப்பதை யாராலும் தடுக்க முடியாது! அதனால், உடனடியாக விழித்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024