புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான இந்தியாவின் போர் சற்று சூடுபிடித்திருக்கிறது. சிகரெட் டப்பாக்களின் மேற்பரப்பில் 85% அளவில் புகைக்கு எதிரான எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்று சமீபத்தில் இடப்பட்ட உத்தரவு நமக்கு நினைவிருக்கலாம். அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடைகளில் சிகரெட்டுகளை உதிரியாக விற்காமல், முழு டப்பாவாக மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.
அத்துடன், புகையிலைப் பொருட்கள் வாங்குகிறவர்களின் குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 25-ஆக அதிகரிப்பதுகுறித்தும் அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டம்-2003-ன்படி பொதுஇடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அதிக அளவு அபராதம் விதிப்பதும் இக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று.
இந்தப் பரிந்துரைகள் அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட உள்ளன. கடைகளில் சிகரெட் வாங்குபவர்களில் 75% உதிரி சிகரெட்டுகளாக வாங்குபவர்கள்தான். 10 சிகரெட்டுகள் இருக்கும் ஒரு பாக்கெட்டை ரூ. 100-க்கும் அதிகமான விலை கொடுத்து வாங்க அவர்கள் தயங்குவது நிச்சயம். இந்தப் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால் சிகரெட் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் வரை சரிவு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். முக்கியமாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிகரெட் வாங்குவதை இதனால் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
வரி வருமானத்தில் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடியை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுத்தந்தாலும், சுகாதாரப் பிரச்சினைகள் மூலம் ஏற்படும் இழப்புக்கு முன்னால் இந்த வருமானம் ஒரு பொருட்டே அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால், இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 2020-ம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 15 லட்சம் பேர் புகைப்பழக்கத்தின் பாதிப்புகளால் உயிரிழக்கலாம் என்று சர்வதேசப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற அமைப்பு கணித்திருக்கிறது. மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால், ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதை ஒப்பிட்டு சிகரெட் புகைப்பதால் பாதிப்பு குறைவு என்று கருதிவிட முடியாது.
விஷம் விஷம்தான்! அதில் நல்ல விஷம் என்றோ கெட்ட விஷம் என்றோ வகைபிரிக்க முடியாது. தவிர, புகைப்பழக்கம் என்பது புகைபிடிப்பவரை மட்டுமல்லாது, அருகில் இருப்போரையும் கொல்லக்கூடியது. எனவே, புகைக்கு எதிரான போரை நடத்துவதற்கு வெறும் சட்டங்களும் உத்தரவுகளும் மட்டும் போதாது, உறுதியான நடவடிக்கைகளும் தேவை. பொதுஇடங்களில் புகைபிடிக்கத் தடை இருந்தும் அதை யாரும் பொருட்படுத்தாததுபோன்ற நிலைமை தற்போதைய சட்டங்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.
2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சிகரெட்டுக்கான கலால் வரிவிதிப்பை 11 சதவீதத்திலிருந்து 72 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்தியாவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அதை அருண் ஜேட்லி குறிப்பிட்டார். புகைபிடிப்பவர்கள், இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டனையாகப் பார்க்காமல் எச்சரிக்கையாகக் கருதினாலே புகைக்கு எதிரான யுத்தத்தில் பாதி வெற்றி கிடைத்துவிடும்.
No comments:
Post a Comment