Saturday, November 22, 2014

புதிய வார்ப்புகள்: பாரதிராஜா படத்தில் சந்திரசேகர் அறிமுகம்


நாடக நடிகராக இருந்த சந்திரசேகர், பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்'' படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நாடக வாய்ப்பு, அதைத் தொடர்ந்து டிவி சீரியல் வாய்ப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்த சந்திரசேகரின் கலை வாழ்க்கையின் அடுத்த முயற்சி சினிமாவாக இருந்தது.

இந்த சமயத்தில்தான், பாரதிராஜா இயக்கிய முதல் படமான "16 வயதினிலே'' திரைக்கு வந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நம்மை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டிய டைரக்டர் பாரதிராஜாதான் என்ற முடிவுக்கு வந்தார், சந்திரசேகர்.

இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-

"சினிமாவில் நடிக்கும் முயற்சியில் சில டைரக்டர்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். இந்த சமயத்தில் மிட்லண்ட் தியேட்டரில் "16 வயதினிலே'' படம் ரிலீசாகியிருந்தது.

ரிலீசான அன்றே படம் பார்க்கப்போனேன். தியேட்டரில் அதிக கூட்டம் இல்லை. டைட்டில் பாடலாக "சோளம் விதைக்கையிலே'' பாடலைக் கேட்டதுமே, "ஆஹா! நம்ம ஊர் மண் வாசனையுடன் கூடிய படமாக இருக்கும் போலிருக்கிறதே'' என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

படம் முடியும்போது, `சீட்' நுனிக்கே வந்துவிட்டேன். படம் முடிந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி: `இந்தப் படத்தின் டைரக்டர் பாரதிராஜா எங்கிருக்கிறார்?'

அப்போதே எனக்குத் தெரிந்த கலை நண்பர்களிடம் போனில் டைரக்டர் பாரதிராஜாவின் முகவரியை கேட்டு வாங்கினேன்.

பாரதிராஜா அப்போது தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

மறுநாள் காலையில் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன். கொஞ்ச நேரத்தில் தலை நிறைய முடியுடன் தூக்கக் கலக்கத்தில் ஒருவர் வந்தார். அவரிடம், "டைரக்டர் பாரதிராஜாங்கறது...'' என்று இழுக்க, அவரோ, "நான்தான் பாரதிராஜா'' என்றார்.

அப்போதுதான் முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். இந்த இளைஞருக்குள்ளா அப்படியொரு கலைஞானம் என்ற வியப்பினால் பேச வார்த்தை வராமல், நின்று கொண்டிருந்தேன்.

அவரது ஊர் மதுரை பக்கம் என்பதை தெரிந்து கொண்டதும், நானும் மதுரை பக்கம்தான் என்றேன். "படம் எப்படி இருக்குது?'' என்று என்னிடம் பாரதிராஜா கேட்டார். "நன்றாக இருக்கிறது. அதனால், நிச்சயமாக நன்றாக ஓடும். உங்களுக்குப் பெரிய அளவில் பெயர் கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டு, "நானும் நடிக்கத்தான் ஊரில் இருந்து வந்தேன். நான் நடிக்கிற முதல் படம் நீங்க டைரக்ட் செய்ற படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்றேன். "வாய்ப்பு தருகிறேன். எனக்கு வருகிற வாய்ப்புகளை பொறுத்து இது அமையும்'' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு தினமும் அவரைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு வணக்கத்தையாவது போட்டுவிட்டுப் போய்விடுவேன்.

இதற்குள் "16 வயதினிலே'' படம், மிகப்பெரிய வெற்றிப்படமானது. எங்கு பார்த்தாலும், பாரதிராஜா பேசப்பட்டார். பட உலகம் வியந்து பார்க்கிற ஒரு மாமனிதராகி விட்டார்.

அடுத்தபடி "கிழக்கே போகும் ரெயில்'' படத்தை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. விடுவேனா? மறுநாள் காலையில் அவர் வீட்டு முன் போய் நின்றேன்.

என்னைப் பார்த்த பாரதிராஜா, "இந்தப் படத்தில் இரண்டு மூன்று கேரக்டர்தான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் உனக்கு கேரக்டர் தர்றதுக்கு வாய்ப்பு இல்லே. நீ என்னிடம் அசிஸ்டெண்ட்டா சேர்ந்துக்க. நடிக்கிற வாய்ப்பு தானாய் அமையும்'' என்றார். எனக்கு நடிப்பின் மீது மட்டுமே நோக்கமாக இருந்ததால், `உதவி இயக்குனர்' வாய்ப்பை தவிர்த்து விட்டேன். "சரி.தினமும் என்னை வந்து பார்த்துப்போ'' என்றார் பாரதிராஜா.

"கிழக்கே போகும் ரெயில்'' படமும், பாரதிராஜாவின் வித்தியாசமான கைவண்ணத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

பாரதிராஜா இப்போது மேலும் பிஸியாகி விட்டார். அடுத்து "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தை இயக்கி அதுவும் வெற்றி. இப்போது மனோபாலா என்ற புதியவர் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்திருந்தார். ஏற்கனவே மனோபாலா எனக்கு நண்பர். நாகேஸ்வரராவ் பார்க்கில் என்னை உட்கார வைத்து போட்டோவெல்லாம் எடுத்திருக்கிறார். நடிகனாக வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.

இப்போது மனோபாலா, டைரக்டர் பாரதிராஜாவிடம் சேர்ந்து விட்டதால் நான் நடிகனாகும் வாய்ப்பு நெருங்கி விட்டதாகவே உணர்ந்தேன்.

"சிவப்பு ரோஜாக்கள்'' படத்தை அடுத்து, புதிய படத்தின் கதை மற்றும் `ஷெட்ïல்' முடிவு செய்யப்பட்டு நடிகர்- நடிகைகளும் முடிவாயினர். நடிகர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை மனோபாலா மூலம் தெரிந்து கொண்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அன்றிரவு 9 மணிக்கு மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடி பாரதிராஜாவின் வீட்டை நோக்கி நடந்தேன். நான் நனைந்து வருவதை தூரத்தில் இருந்தே கவனித்து விட்டார், பாரதிராஜா. என்னைப் பார்த்ததும், "என்னய்யா! மழையில் நனைந்து வர்ற அளவுக்கு என்ன விசேஷம்?'' என்று கேட்டார்.

நான்தான் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறேனே. அந்த கடுப்பை வேறுவிதமாக அவரிடம் வெளிப்படுத்த எண்ணினேன். "ஒரு மகிழ்ச்சியான செய்தி. எனக்கு படம் `புக்' ஆகியிருக்கிறது'' என்றேன்.

"ரொம்ப சந்தோஷம்யா! யாருடைய படம்?'' என்று கேட்டார், பாரதிராஜா.

"உங்க படம்தான்!'' என்றேன்.

"யோவ்! என்னய்யா சொல்றே?'' என்று திகைப்புடன் கேட்டார், பாரதிராஜா.

"பாலா (மனோபாலா) வந்து ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட்ல என் பேர் இல்லைங்கிறார். நான் உங்க கூட அவுட்டோர் வரப்போறேன். படத்தில் எனக்கு சின்ன ரோலாவது நீங்க கொடுத்தே தீரணும்'' என்றேன்.

கொஞ்சம் யோசித்தவர் என் முகத்தை பார்த்தார். பிறகு, "சரி வாய்யா!'' என்றார்.

இப்போது எனக்குள் இருந்த பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்டேவிட்டேன். "என் மூஞ்சி அழகாக இல்லேன்னுதான் எனக்கு நடிக்க சான்ஸ் தராம இருந்தீங்களா?'' என்று கேட்டேன்.

பாரதிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. "உன் நடிப்பை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அப்புறம் மூஞ்சி என்னடா மூஞ்சி?'' என்றார்.

அப்போதே அவர் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அந்தப் படத்துக்கு `புதிய வார்ப்புகள்' என்று பெயர் சூட்டிய பாரதிராஜா, தனது உதவியாளர் பாக்யராஜையே படத்தின் கதாநாயகனாக்கினார்.

தேனியில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தொடங்கி 20 நாட்கள் வரை நான் சும்மாவே இருந்தேன். படப்பிடிப்பில் சின்னச்சின்ன வேலைகள் செய்தபடி எனக்கான வாய்ப்பை எதிர் நோக்கியிருந்தேன்.

21-வது நாளில் என்னை அழைத்தார் பாரதிராஜா. "யோவ்! நீ நடிக்கிறே! நாளைக்கு காலைல மேக்கப்போட்டு ரெடியா இரு'' என்றார். மறுநாள் காலை 5 மணிக்கே மேக்கப் போட்டு நான் ரெடி. `அல்லி நகரம்' ராஜேந்திரன்தான் மேக்கப் மேன். அவர் என்னிடம், "பாரதிராஜாவுக்கு சொந்தமா?'' என்று கேட்டார். "ஆமாம்ணே'' என்றேன்.

"ஊரில் இருந்து ஒரு ஆள் சினிமாவுக்கு வந்துடக்கூடாதே! உடனே நடிக்கணும்னு எல்லோரும் புறப்பட்டு வந்துருவீங்களே! வர்றதுதான் வரீங்க! வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பார்த்துட்டு வந்திருக்கலாமில்லே!'' என்றார்.

நான் அதை கண்டுகொள்ளவில்லை. நடிக்கத் தயாரானேன். கதைப்படி படத்தின் கதாநாயகி ரதியை நான் பொண்ணு பார்க்கப்போகிற காட்சி. நான் மாப்பிள்ளைக் கோலத்தில், கொஞ்சம் காலை சாய்த்து நடந்தபடி பெண் வீட்டுக்குப் போகவேண்டும். நான் போகிற வரப்பு வழியில் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைப் போடச் சொன்னார், பாரதிராஜா. நான் அதில் மிதித்து விட்டு பெண்ணின் தந்தையை பார்த்து, "மாமா! நடந்து வர்றப்ப சாணியை மிதிச்சிட்டேன்'' என்று சொல்ல வேண்டும்.

டைரக்டர் சொன்னபடி செய்தேன். முதல் `ஷாட்'டிலேயே காட்சி ஓ.கே.யானது. மகிழ்ச்சியுடன் என்னை அழைத்த டைரக்டர், "நீ நடந்து வரும்போது எதுக்காக சாணியில் மிதிச்சிட்டு வரச்சொன்னேன் தெரியுமா? சாணி என்பது மங்களகரமானது. முதன் முதலா நடிக்க வர்றே. நிறைய படங்களில் நடிச்சு பெயர் வாங்கணும். புகழ் கிடைக்கணும். அப்படி உன் நடிப்பு வாழ்க்கை அமையணும்னுதான் சாணியில் மிதிச்சிட்டு வர்ற மாதிரி முதல் காட்சியை எடுத்தேன்'' என்றார்.

என் மேல் எத்தனை அன்பு, எத்தனை அக்கறை! அவரது அந்த அன்பில் நெகிழ்ந்து போனேன்.''

இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024