5 ஏக்கர் நிலப்பரப்பில்...
சென்னையை அடுத்த வண்டலூரில் சுமார் ஆயிரத்து 490 ஏக்கர் நிலப்பரப்பில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 46 வகை விலங்குகள் சுமார் 400-ம், 74 வகை பறவைகள் சுமார் 750-ம், 32 வகை ஊர்வனற்றில் சுமார் 350 உள்ளன.
இதில், வங்கப்புலிகள் என்று அழைக்கப்படும் ஆரஞ்சு நிறப்புலிகள் 12, கலப்பின புலிகளான வெள்ளைப்புலிகள் 14 உள்ளன.
இவற்றில், 5 பெண் புலிகள் மட்டும் வசிப்பதற்கு வசதியாக ஒரு கூண்டுடன் கூடிய அடர்ந்த காட்டுப்பகுதி சுமார் 5 ஏக்கரில் உள்ளது.
இதற்கு அருகில் ஒருபுறம் மான் சரணாலயம், ஒரு புறம் சிங்கத்தின் வசிப்பிடம், மற்றொரு புறம் பறவைகள் வசிக் கும் இடம் ஆகியவை உள்ளன.
சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது
இந்த புலிகளை பொதுமக்கள் பார்ப்பதற்காக, அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு பகுதியை இரும்பு வலையால் அடைத்து அந்த இடத்தில் விடுவது வழக்கம். மேலும் இரும்பு வேலிக்கு பின்னால், அடர்ந்த செடி கொடிகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் புலிகள் சுற்றித்திரிவதற்கு வசதியாக பிரத்யேக வழிகளும் உள்ளன.
புலிகள் அடைக்கப்பட்டுள்ள 5 ஏக்கர் பகுதியை சுற்றிலும் 30 மீட்டர் அகலத்தில் அகழி தோண்டப்பட்டு உள்ளது. அகழியை ஒட்டி 7 மீட்டர் உயர சுவர் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக, அகழியின் ஒரு பகுதியில் சுமார் 100 அடி நீளத்திற்கு, கருங்கற்களால் அமைக்கப்பட்டிருந்த சுவர் நேற்று முன்தினம் சரிந்து விழுந்தது.
தப்பிய புலி
அந்த நேரத்தில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில், பத்மா என்ற 12 வயது பெண் புலியுடன், சுமார் 2 முதல் 2½ வயது அடங்கிய வித்தியா, ஆர்த்தி, உத்ரா, ‘நேத்ரா’ ஆகிய பெண் புலிகள் சுற்றித்திரிந்துள்ளன. சுவர் இடிந்து விழுந்ததைக் கண்ட, வனத்துறை ஊழியர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலையடுத்து, பூங்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் குழு அதிவேகமாக உயிரியல் பூங்காவிற்குள் வந்து. புலிகள் சுற்றித் திரிவதற்கான அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து பத்மா, வித்யா, ஆர்த்தி, உத்ரா ஆகிய பெண் புலிகளை துப்பாக்கியின் மூலம் மயக்க ஊசி செலுத்தி, அவற்றை பிடித்து கூண்டுக்குள் அடைத்து விட்டனர்.
எனினும், பூங்கா உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினரின் கண்ணில் படாமல் ‘நேத்ரா’ என்ற பெண் புலி தப்பித்துவிட்டது.
எனினும் அந்த புலி அகழியை விட்டு வெளியில் சென்று விடாமல் இருக்கும் வகையில், வனத்துறையினர் சுவர் இடிந்த பகுதியில் அவசர, அவசரமாக இரும்பு கம்பியால் வலை அமைத்தனர்.
ஆயினும், ‘நேத்ரா’ புலி, அதற்கான காட்டுப்பகுதியில் தான் உள்ளதா? அல்லது அகழியை விட்டு வெளியே சென்றுவிட்டதா? என்பதை அறிவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை நேற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
வனத்துறையினர், தீப்பந்தம், கவை கம்புகள், மயக்க மருந்து ஊசி போடும் துப்பாக்கி சகிதம் குழுக்களாக பிரிந்து அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
தப்பிய புலியை பிடிப்பதற்கு நேற்று முன்தினம் இரவு பூங்கா அதிகாரிகள் செய்த முயற்சி பயன் அளிக்கவில்லை. இந்த செய்தி காட்டு தீ போல் நேற்று முன்தினம் இரவு பூங்காவின் அருகில் உள்ள கிராம மக்கள் இடையே பரவியது. கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் வண்டலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் புலி இருப்பிடத்திற்கு வந்து பார்த்த போது உடைந்த சுற்றுசுவர் அருகே புலி நடமாடியதை அதனுடைய கால் தடயங்களை வைத்து உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பூங்கா ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் மருத்துவர்கள் கொண்ட குழுவினர், புலி இருப்பிடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்துள்ள 2 வயது புலிக்குட்டியை தீவிரமாக தேடிப்பார்த்தனர். ஆனால் புலிக்குட்டி கிடைக்கவில்லை.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் உயரமான மரத்தின் மேல் ஏறிநின்று பைனாகுலர் (தொலைநோக்கி) மூலம் பார்த்த போது புலி நடமாட்டம் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்தனர்.
தேடும் பணி நீடிக்கிறது
இதனை தொடர்ந்து பூங்கா மருத்துவர்கள் மயக்க மருந்து துப்பாக்கியுடனும், ஊழியர்கள் நெருப்பு தீப்பந்தங்களுடனும் புலிக்குட்டி பதுங்கியுள்ள அடர்ந்த புதர் பகுதிக்கு சென்றனர். ஆனால் புதரில் இருக்கும் புலிக்குட்டி வெளியே வரவில்லை.
நேற்று மாலை 6 மணி வரை புலிக்குட்டியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் புலிக்குட்டி சிக்கவில்லை, 6 மணிக்கு மேல் இருள் சூழந்துள்ளதால் தேடும்பணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே புலிக்குட்டிகள் பதுங்கியுள்ள இருப்பிடம் அருகே சாம்பார் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தப்பிய புலிக்குட்டி உறுமும் சத்தம் கேட்டவுடன் மான்கள் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றன.
பார்வையாளர்களுக்கு தடை
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூங்கா திறந்து இருந்தது. புலிக்குட்டி தப்பித்துவிட்டதாக வந்த செய்தியால் பூங்காவிற்கு நேற்று குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தனர். இவர்கள் பூங்காவில் உள்ள புலி இருப்பிடங்களை பார்வை யிடுவதற்கு பூங்கா நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
மேலும் புலி இருப்பிடங்களுக்கு செல்லும் சாலைகளில் வனத்துறை ஊழியர்கள் மரங்களை வெட்டிப்போட்டு சாலையை அடைத்தனர். இதனால் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் புலியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இது குறித்து பூங்கா உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேற்று முன்தினம் முழுவதும் புலி இருப்பிடத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியுள்ள புலிக்குட்டியை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால் புலிக்குட்டி கிடைக்கவில்லை. நாளை (இன்று) காலையில் இருந்து மீண்டும் தேடுதல் வேட்டை தொடரும். புலிக் குட்டி விரும்பி சாப்பிடும் உணவுகளை புலிக்குட்டி பதுங்கியுள்ள இடங்களில் இன்று வைக்கப்படும். அதனை சாப்பிட வரும் புலிக்குட்டி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். புலிக்குட்டியை கண்டிப்பாக பிடித்துவிடுவோம், இதனால் அருகில் உள்ள கிராம மக்கள், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை.
No comments:
Post a Comment