Thursday, November 27, 2014

எங்கே இருக்கிறான் அந்த எதிரி?



வெளியாவதற்கு முன் பெரிதும் பேசப்பட்ட தமிழ்ப் படங்களுள் ஒன்று 'ஆளவந்தான்'. இந்தப் படத்தில் கமல் மனச்சிதைவு நோயாளியாகக் காண்பிக்கப்பட்டிருப்பார். பொதுவாக மனச்சிதைவு நோயாளிகள், அந்த நோயுடன் தவறான நம்பிக்கைகளுடன் (Delusions) இருப்பார்கள். இந்தப் படத்தில் கமலும் அப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் சித்திரிக்கப்பட்டிருப்பார்.

அவருடைய சித்தி கதாபாத்திரத்தின் நடத்தை அவருக்குப் பிடிக்காது. சித்தியை எதிரியாக நினைத்துக் கொன்று விடுவார். காணும் பெண்களெல்லாம் சித்தி உருவமாகத் தெரியும். அதனால், அவர்கள் எல்லோரையும் கொல்ல நினைப்பார். அதுபோல அசாதாரணக் காரியங்கள் செய்பவராகவும் இருப்பார்.

இன்னொரு கமலின் காதலியையும் (ரவீணா டான்டன்) தனக்கு எதிரான சித்தியாகவே நினைப்பார். இது சரியான சித்திரிப்பு. ஆனால் சிறையில், மனநலக் காப்பகத்திலிருந்து சிலருடன் கூட்டு சேர்ந்து அவர் தப்பித்து விடுவார். இது தவறான சித்திரிப்பு. ஏனென்றால், இம்மாதிரி தவறான நம்பிக்கை வைத்திருக்கும் மனச்சிதைவு நோயாளிகள் யாருடனும் கூட்டுச் சேரமாட்டார்கள்.

சென்னையில் இயங்கிவரும் அரசு மனநலக் காப்பகத்தில் மனச்சிதைவு நோயாளிகள் 1,500 பேர் இருப்பார்கள். அவர்களுக்கான பாதுகாவலர்கள் பத்து, பதினைந்து பேர்தான் இருப்பார்கள். கூட்டு சேரும் வாய்ப்பு இருந்தால், அங்குள்ள மன நோயாளிகள் எளிதாகத் தப்பிவிட முடியும்.

தவறான நம்பிக்கைகள் (Delusions)

உலகில் இரண்டு வகையான நம்பிக்கைகள் உண்டு. ஒன்று, மூடநம்பிக்கை. இது தனிநபர் நம்பிக்கை அல்ல. சமூகத்துக்கே இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கும். பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இது ஆபத்தான ஒன்றுதான்.

மற்றொன்று, மேலே குறிப்பிட்டது போன்ற தவறான நம்பிக்கை. இந்தத் தவறான நம்பிக்கை என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே உள்ள நம்பிக்கை. இம்மாதிரி தவறான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சிலரால் தனக்கு ஆபத்து ஏற்படும் என நம்புவார்கள். அவர்கள் தன்னைத் தாக்கும் முன், நாமே அவரைத் தாக்கிக் கொன்றுவிட வேண்டும் என நினைப்பார்கள். இந்த எண்ணம் மிக ஆழமாகப் பதிந்திருக்கும்.

சிலர் தெருவில் வசிக்கும் எல்லோரையும் தனக்கு எதிரியாகப் பார்ப்பார்கள். போலீஸ் தன்னை உடனே கைது செய்துவிடும் என்ற தவறான நம்பிக்கையுடன் வீட்டை வெளியே வராமல் சிலர் இருப்பார்கள். சாவித் துவாரம்கூட வெளியே தெரியாதபடி வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளேயே இருப்பார்கள். சைக்கோ கொலைகளுக்கு இந்தத் தவறான நம்பிக்கைகள்தான் முக்கியக் காரணம்.

இதில் மூன்று வகையான பாதிப்புகள் உள்ளன. பிறரால் தனக்கு ஆபத்து வருவதாக நினைப்பது (Delusional Persecution), தன்னைத் தானே உயர்வாக நம்பிக்கொள்வது (Grandiose delusions) - அதாவது தனக்கு அபரிமிதமான சக்தி இருப்பதாக நினைப்பது, ஒதெல்லோ சிண்ட்ரோம் (Othello syndrome). இந்த ஒதெல்லோ சிண்ட்ரோம்தான் கணவன் - மனைவி சந்தேகக் கொலைகளுக்கு முக்கியக் காரணம்.

ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கு

1984-ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் என்பவர் தன் சகோதரி, சகோதரியின் கணவர், அவர்களுடைய குழந்தை, மேலும் ஆறு உறவினர்களை ஒரே நாளில் கொலை செய்துவிட்டார். இந்தக் கொலை வழக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கொலைகளுக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தவறான நம்பிக்கைகளே (Delusions).

இது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது. தன் எதிரிதான் உறவினர்களின் உருவத்தில் மாறுவேடத்தில் தன்னைக் கொல்ல வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை வலுவாக நம்பியதால் இம்மாதிரி கொலைகள் நிகழ்கின்றன.

தவறான நம்பிக்கைகளின் வகைகள்

இதிலே பல வகைகள் உண்டு. Delusional mood என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அதாவது, எதிரே இருப்பவர்களின் சிறுசிறு அசைவுகூடத் தனக்கு ஆபத்தை விளைவிக்கும் என, ஓர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நினைப்பது. உதாரணமாக, சட்டைப் பைக்குள் கையை விட்டால் தன்னைச் சுடுவதற்குத் துப்பாக்கியை எடுக்கிறார் என நினைத்து எதிரில் இருப்பவரைத் தாக்கிவிடுவார்கள்.

லேசாகத் திரும்பிப் பார்த்தால் தன்னைத் தாக்கத்தான் ஜாடை செய்கிறார் என நினைப்பார்கள். இன்னொன்று Delusional Community. அதாவது முதலில் ஒருவரைத் தனக்கு எதிரியாகப் பாவித்து, பிறகு பலரையும் அவருடைய கூட்டாளிகள் என நம்புவது.

நடைமுறை உதாரணம்

இப்போது என்னிடம் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்கும் இது மாதிரித் தவறான நம்பிக்கைகள்தான் பிரச்சினை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக நான்கு இளைஞர்கள் தன்னைப் பின்தொடர்வதாக அவர் நம்புகிறார். பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றும் நம்புகிறார். தெருவுக்கு வந்தாலே பின்தொடர ஆரம்பித்து விடுகிறார்கள், நான் எங்குப் போகிறேன் எனத் தெரிந்துகொள்கிறார்கள் எனத் தன் தவறான நம்பிக்கைக்கு ஆதாரத்தையும் அடுக்கி, ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளித்துவிட்டார்.

ஆனால் விசாரித்துப் பார்த்தால், அந்த நான்கு இளைஞர்களும் குற்றமற்றவர்கள் எனத் தெரியவந்தது. மேலும், அந்தப் பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்களே அவருக்குத்தான் பிரச்சினை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் சொல்வது போல் யாரும் அவரைப் பின் தொடரவில்லை. அவருக்கு ஒரு தவறான நம்பிக்கை ஏற்பட்டு, அதை அவரே வலுவாக நம்பத் தொடங்கிவிடுகிறார்.

ஏன் ஏற்படுகிறது?

எதனால் இந்தப் பிரச்சினை வருகிறது எனச் சரியாகச் சொல்ல முடியாது. 'ஆளவந்தான்' படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி சித்திக் கொடுமையைச் சிறிய வயதில் அனுபவித்திருந்தால் வரக்கூடும். ஆனால், சித்திக் கொடுமை அனுபவித்த எல்லோருக்கும் இப்படி ஏற்படும் எனச் சொல்ல முடியாது. மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் தானாகவே வரலாம்.

குணப்படுத்துதல்

முதலில் டோபமைன் (Dopamine) என்ற நரம்பியல் அலைபரப்பியின் அளவு கூடுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக நினைத்து, அதைச் சரிசெய்யும் மருந்துகள் இதற்கு அளிக்கப்பட்டன. இப்போது நரம்பியல் அலைபரப்பியில் ஏற்படும் ஸ்திரத்தன்மையற்ற நிலையாலும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், அதற்கேற்பப் பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்தப் பாதிப்பை மருந்துகளால் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

கட்டுரையாளர், கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்,
மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024