Sunday, November 16, 2014

இது ஆப்பிள் ரகசியம்!



ஆப்பிளின் ஐபோன் பற்றி நீங்கள் விரிவாக அறிந்து வைத்திருக்கலாம். ஐபோன் பற்றிப் பல அரிய தகவல்களும் அத்துபடியாக இருக்கலாம். ஆனால் ஐபோன் விளம்பரத்தை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? அதில் எப்போதுமே ஒரு பொதுத்தன்மை இருக்கும் தெரியுமா? அந்த விளம்பரங்களில் எல்லாம் காட்டப்படும் நேரம் காலை 09:41 ஆக இருக்கும். இதன் பின்னே ஏதோ சங்கேதக் குறியீடு இருப்பதாக எல்லாம் நினைக்க வேண்டாம். இதன் பின்னே ஒரு சின்ன ரகசியம் இருக்கிறது. தி அட்லாண்டிக் பத்திரிகை இதைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது.

09:42 என்பது 2007 ஜனவரில் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் முறையாக ஐபோனை அறிமுகம் செய்த நேரம். 2010 வரை இந்த நேரமே விளம்பரத்தில் இடம்பெற்றது. 2010-ல் இது 09:41 என மாற்றப்பட்டது. இது ஜாப்ஸ் முதல் ஐபேடை அறிமுகம் செய்த நேரம். அதன் பிறகு ஐபோன், ஐபேட் விளம்பரங்களில் எல்லாம் 09:41 எனும் நேரமே இடம்பெற்றுள்ளது.

ஆப்பிளின் புதிய பொருள் அறிமுகத்துக்கான கீநோட் உரை மிகவும் புகழ்பெற்றது. இந்த உரையை எப்போதுமே 40-வது நிமிடத்தில் நிகழும் வகையில் அமைப்பதும் ஆப்பிளின் வழக்கமாம். பெரிய திரையில் தயாரிப்பு தோன்றும்போது அதில் உள்ள நேரமும் பார்வையாளர் கடிகாரத்தில் உள்ள நேரமும் ஒன்றாக இருக்க வேண்டுமாம். ஆனால், 40 நிமிடத்தைத் துல்லியமாக அடைவது கடினம் என்பதால் ஒரு நிமிடம் கூடுதலாக வைத்துள்ளனர்.

எல்லாம் சரி, ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் விளம்பரம் என்ன நேரம் காட்டும்?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024