Sunday, November 23, 2014

விதிவிலக்குகளே மேல்!



சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநில முதல்வர், மதுவிலக்கைத் தமது மாநிலத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அதன் ஆரம்பக் கட்டமாக, "பார்'களை மூடிவிடப் போவதாகவும் சொன்னார். அதுபோல, தமிழ்நாட்டிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்ற பரவலான கருத்து எழுந்தது. முக்கியத் தலைவர்களும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். பின்னர் அதைப் பற்றிய பேச்சையே காணோம்.

மதுவிலக்கு நடைமுறையிலிருந்த சமயம் (1972-க்கு முன்) தமிழ்நாடு எப்படி இருந்தது என்று எனக்கு இன்னமும் நன்றாக ஞாபகமிருக்கிறது. பெங்களூரிலிருந்து கோட்ட மேலாளர் சென்னைக்கு வருகை தந்தார். அவருக்காக மேலாளர் ஒரு விஸ்கி பாட்டிலை மறைத்து வைத்து ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு போனார். அந்தக் காலத்தில், இளைஞர்கள் மத்தியில் "பாண்டிச்சேரி போகிறான்' என்றாலே, ஒரு கோணல் சிரிப்பு பரவும்.

அயல்நாட்டவர்களுக்கு மது அருந்துவது என்பது, காப்பி குடிப்பது போல. மேலும் அவர்களுக்கு, Drink என்பதற்கும் Drankard என்ற பதத்துக்கும் உள்ள வேறுபாடு துல்லியமாகத் தெரியும். அங்கு குடித்துவிட்டுச் சாலையில் புரளுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சிகரெட், போதை மருந்து, புகையிலை எல்லாமே மது போல் தீய பழக்கங்கள்தான் - சந்தேகமேயில்லை. ஆனால் சிகரெட், புகையிலை போன்றவைகளால் தனியொரு மனிதன்தான் சீரழிகிறான். என் அலுவலக நண்பர் ஒருவர் "பான்' பழக்கத்தால், தொண்டை புற்றுநோயால் இறந்து போனார். ஆனால், ஒருவர் மது அருந்துவதால், அவரது குடும்பமே சீரழிந்து, நிர்க்கதியில் நிற்கிறது.

நான் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் பல பணிப்பெண்கள் வேலை செய்து கணிசமாகச் சம்பாதிக்கிறார்கள். பால் பாக்கெட் வினியோகம், இளநீர் விற்பது, இல்லங்களில் பாத்திரம் தேய்ப்பது போன்ற பல. இவர்கள் இப்படி சம்பாதித்தாலும், கணவன்மார்களின் குடிப்பழக்கத்தால் குடும்பம் கெட்டுப் போவதைப் பார்க்கிறேன்.

ஏழை எளிய குடும்பங்களில் இப்படியெனில், உயர், மத்தியதர குடும்பங்களில் வேறு விதம். பொருத்தமான வேலை கிடைக்காதது; உரிய காலத்தில் பதவி உயர்வு கிட்டாதது; குடும்பச் சிக்கல்; மண முறிவு - இத்தகைய காரணிகள் இவர்களுக்கு மதுவைத் தீண்ட முதற்படி. தங்கள் மன அழுத்தத்துக்கு ஒரு வடிகாலாக உணர்கிறார்கள். நாளடைவில் அது ஒரு கொடிய பழக்கமாகவே அவர்களைத் தொற்றிக் கொண்டு விடுகிறது. இதனால், கை கால் உதறல்; உடல் நடுக்கம் போன்றவைகள் பற்றிக் கொண்டு, குடும்பமே தள்ளாடும் நிலைமைக்கு வருகிறது.

ஓர் அம்சத்தை இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். பல துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மது அருந்துதல்தான் இதற்கு முக்கிய காரணம் என்பது வெளிப்படை. விபத்து மட்டுமல்ல, வன்முறை, பாலியல் குற்றம் போன்ற பல்வகைக் குற்றங்கள் பரவிப் பெருக மதுப் பழக்கமே முக்கிய காரணம்.

ஆக, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மது, தீமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. மதுவிலக்கு எதிர்ப்பாளர்கள் என்ன கூறுகிறார்கள்? "வருவாய் வேறு மாநிலத்துக்குப் போகும். கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும்' என்பன போன்ற வாதங்களை வைக்கிறார்கள்; போதாததற்கு விழிப்புணர்வு ஏற்பட மையங்கள் ஏற்பட வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவுரை வழங்க "நிபுணர் குழு' அமைக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்கள். பற்பல ஆண்டுகளாக பிரசாரம் செய்தும், எவ்விதப் பலனும் இல்லையே?

மதுவினால் விளையும் கொடுமைகளை நோக்கும்போது, அவ்வப்போது கள்ளச்சாராயக் குற்றங்கள் ஏற்படுவது பரவாயில்லை. அவை விதிவிலக்காகத்தானிருக்கும். நிரந்தரக் கொடுமையைவிட, விதிவிலக்கு மேலானவைதான்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024