Tuesday, November 18, 2014

உயிரோடு இருக்கும் தந்தைக்கு இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்

தேனி: உயிருடன் உள்ள தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி, வீட்டை தன் பெயருக்கு மாற்ற முயன்ற மகன் மற்றும் சான்றிதழ் வழங்கிய பேரூராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து, ஊர்மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கண்டிப்பு:

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 69; ஓய்வு பெற்ற பள்ளி டிரைவர். இவரது ஒரே மகன் கண்ணன், 38, அதே பள்ளியில் தற்போது ஆசிரியராக உள்ளார். கடந்த, 10 ஆண்டு களுக்கு முன் மகன் கண்ணனின் செயல்பாடுகளை நாகராஜ் கண்டித்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஊரை விட்டு சென்ற நாகராஜ், தற்போது புட்டபர்த்தியில் இருப்பதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தந்தை பெயரில் உள்ள வீட்டை விற்க, ஆசிரியர் கண்ணன் முடிவு செய்தார். இதற்காக, நெஞ்சு வலியால், தந்தை, வீட்டில் இறந்து விட்டதாகவும், அவரை ஊர் மயானத்தில் அடக்கம் செய்து விட்டதாகவும், இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு பேரூராட்சி பெண் ஊழியர் மறுத்துவிட்டார். லஞ்சம் பெற்று, அங்கிருந்த மற்றொரு ஊழியர், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தந்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஆக., 8ல் காமயவுண்டன்பட்டியில், நாகராஜ் இறந்து விட்டதாக, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து அவரது மகன், வீட்டின் உரிமையை மாற்ற ஏற்பாடு செய்தார். இந்த விவரம் ஊர் மக்கள் சிலருக்கு தெரிய வந்தது.

ஆவணங்கள்:

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆவணங்களை பெற்று, ஆதாரபூர்வமாக தேனி மாவட்ட நுகர்வோர் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு அமைப்பின் செயலர் முத்துவீரப்பன், கலெக்டர் பழனிசாமியிடம் மனு கொடுத்துள்ளார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024