Tuesday, November 18, 2014

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு ஆஸ்திரேலியாவில் 20 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் பேச்சு


ஆஸ்திரேலியாவில் 20 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார்.

சிட்னியில் வரவேற்பு

மேலும் பிரிஸ்பேன் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நகரில் மகாத்மா காந்தியின் உருவச்சிலையையும் அவர் திறந்துவைத்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக பிரிஸ்பேன் நகரில் இருந்து பிரதமர் மோடி நேற்று சிட்னி நகருக்கு சென்றார்.

சிட்னியில் ஒலிம்பிக் பார்க்கில் உள்ள அல்போன்ஸ் அரங்கில் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 20 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. அங்கு கூடி இருந்தவர்களில் கணிசமான பேர் மோடியின் உருவம் பொறித்த ‘டி சர்ட்’ அணிந்து இருந்தனர்.

வாழ்த்து கோஷம்

பிரதமர் மோடி அரங்கத்துக்குள் நுழைந்ததும், அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எழுந்து நின்று ‘மோடி’, ‘மோடி’ என்று கூறி வாழ்த்துக்கோஷம் எழுப்பினார்கள். அவர்களை நோக்கி கை அசைத்து வணக்கம் தெரிவித்தபடியே மோடி உள்ளே வந்தார். மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தால் அரங்கம் முழுவதும் உற்சாகம் நிரம்பி வழிந்தது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல இந்தியரான கார்ட்டூனிஸ்ட் ரமேஷ் சந்திரா, கிரிக்கெட் வீரர் பிரெட் லீ மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

மோடிக்கு வரவேற்பு அளிக் கும் வகையில் தொடக்கத்தில் சிறிது நேரம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அழகான தேசம். அழகான சிட்னி உலகின் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய நகரம் ஆகும். நீங்கள் அளித்து இருக்கும் இந்த சிறப்பான வரவேற்பும், மரியாதையும் எனக்கானது அல்ல. இவை அனைத்தும் எனக்கு வாக்களித்த மக்களைப் போய் சேரவேண்டியது ஆகும்.

பாரதத்தை வணங்குமாறு சுவாமி விவேகானந்தர் கூறினார். தேசத்தின் விடுதலைக் காக போராடி சிறைக்கு செல்லும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. நாம் இந்தியாவுக்காக உயிரை விட வேண்டாம், இந்தியாவுக்காக வாழ்ந்தாலே போதும். 125 கோடி இந்தியர்கள் அனைவரின் மனதிலும் இந்த எண்ணம் இடம்பெற வேண்டும்.

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை இந்தியர்களாலும் ஆஸ்திரேலியர்களாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட் நம்மை இணைக்கிறது. ஜனநாயகத்திலும் இரு நாடுகளும் சிறப்புடன் விளங்குகின்றன. ஜனநாயகம்தான் நமது பலம் ஆகும்.

ஜனநாயகத்தின் வலிமை

இந்திய ஜனநாயகத்தின் வலிமையை எல்லோரும் உணர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக இந்தியா பாடுபடும். இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு. நாட்டுக்கான உழைக்க எந்த நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும். அரசாங்கங்கள் தேசத்தை உருவாக்குவது இல்லை. மக்கள்தான் தேசத்தை உருவாக்குகிறார்கள்.

125 கோடி மக்களை கொண்ட இந்தியா எதற்காக பின்தங்கி இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக உழைத்து மிகப்பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை ஆகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் பிறந்தவர்களில் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இனி ஓர் இந்திய பிரதமர் ஆஸ்திரேலியா வருவதற்காக நீங்கள் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

தூய்மை இந்தியா திட்டம்

நாங்கள் கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உதவ வேண்டும். நாடு தூய்மையாக இருந்தால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நோய்தான் ஏழைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்வதை விட ஏழைகளுக்கு வேறு பெரிய அளவில் நன்மை செய்துவிட முடியாது.

சிலர் பெரிய அளவில் கனவு காண்கிறார்கள். ஆனால் நான், கழிவறைகள் கட்டுவது, நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவற்றில் மிகுந்த அக்கறை காட்டுகிறேன். இந்தியாவில் ஏழைகளுக்கு கழிவறைகள் கட்டுவதற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும்.

முதலீடு செய்யுங்கள்

கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று உரையாற்றிய போது வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை அறிவித்தேன். அதைத் தொடர்ந்து, 10 வாரங்களில் 7 கோடி பேருக்கு வங்கி கணக்கு கள் தொடங்கப்பட்டு ரூ.5 ஆயிரம் கோடி அந்த கணக்குகளில் செலுத்தப்பட்டு இருக்கிறது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த உலகுக்கு தேவையானவற்றை இந்தியாவில் தயாரிக்க முடியும். இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.

எனது அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா மாறி இருக்கிறது. ரெயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவில் ரெயில்வே கட்டுமான துறையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று நம்புகிறேன்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பழைய அனுபவங்களை நினைத்து தயங்க வேண்டாம். புதிய அரசு வெளிநாட்டவர்களுக்காக சிறப்பான வழிகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்.

இந்திய இளைஞர்களுக்கு இப்போது தேவையானது திறன் மேம்பாடு. நீங்கள் கனவு காணும் இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். சட்டங்கள் மக்களின் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். இதற்காக சில பழைய சட்டங்களை நீக்கவும் தயாராக இருக்கிறோம். கதவுகளை திறக்கும்போதுதான் புதிய காற்று உள்ளே வரும்.

விசா வழங்கும் திட்டம்

இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களால் பங்குகொள்ள முடியவில்லை என்பதை நான் அறிவேன். அவர்களை பொறுத்தவரை தேர்தல் ஒரு போட்டி அல்ல. பாரத மாதாவுக்கு ஜே! என்பதுதான் அவர்கள் மனதில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் ‘விசா’ வழங்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் சிட்னி கலாசார மையம் அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024