Saturday, November 22, 2014

50 லட்சம் பேருக்கு அங்கீகாரம் அதிரடி உத்தரவிட்டார் ஒபாமா



வாஷிங்டன்: அமெரிக்காவில், முறையான வழிகளில் இல்லாமல், சட்டவிரோதமாக குடியேறியதாக கருதப்படும், 50 லட்சம் பேருக்கு, அமெரிக்காவில் குடியிருக்க, சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி, அதிபர் ஒபாமா, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, அமெரிக்காவில் குடியிருக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.


எச்.1பி விசா:

அதிக சம்பளம், வல்லுனர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு போன்ற பல காரணங்களால், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு, எச்.1பி என்ற விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் அமெரிக்கா சென்றவர்கள், அங்கேயே தொடர்ந்து வாழ விரும்பினால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை. மாறாக, குறிப்பிட்ட காலத்திற்கு பின், கிரீன் கார்டு என்ற அட்டை வழங்கப்படுகிறது. இதற்கு, 'லீகல் பெர்மனென்ட் ஸ்டேட்டஸ்' என்று பெயர். எனினும், அத்தகையவர்கள் உட்பட பிறர், சட்டப்பூர்வமாக குடியேறியவர்களாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், 1.10 கோடி பேர், அமெரிக்காவின், 50 மாகாணங்களில் பல ஆண்டுகளாக வாழ்கின்றனர்; தங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அத்தகையவர்களில், 50 லட்சம் பேருக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்கி, அதிபர் ஒபாமா, நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதை, அந்நாட்டின், 'டிவி'யில் தோன்றி அறிவித்தார். இதைக் கேட்ட, இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, அமெரிக்காவில் வேலை பார்க்க சென்றுள்ள லட்சக்கணக்கானோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் குடியேறியுள்ள, 4.5 லட்சம் இந்தியர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும்.

யாருக்கு நன்மை


* அமெரிக்காவில் குடியேறியுள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இனிமேல் கிரீன் கார்டு கிடைக்கும்.


* கணவன் அல்லது மனைவியில் யாராவது ஒருவருக்கு விசா கிடைத்து, மற்றவருக்கு கிடைக்காத நிலை இனிமேல் மாறும்.


* எச்.1பி விசா வைத்திருப்பவர்கள், ஒரே நிறுவனத்தை அண்டியிருக்க வேண்டியதில்லை; தேவைப்பட்டால், வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம்.


* அங்கீகாரம் பெற்றுள்ள பிற நாடுகளின் தொழிலாளர்களுக்கு, அமெரிக்க சட்டப்படியான சலுகைகள் கிடைக்கும்.


* வெளிநாட்டு தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.



குடியேறிகள் நாடு தான் அமெரிக்கா:


அமெரிக்கா சென்றால் தங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம்; குழந்தைகளை படிக்க வைக்கலாம் என கருதி, ஏராளமானோர் இங்கு வருகின்றனர். அவர்கள், இந்த நாட்டிற்காக பாடுபடுகின்றனர். குறைந்த சம்பளத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்கள் சிறப்பான சேவையாற்றுகின்றனர்.

சிறப்பு அதிகாரம்:


இந்த நாடே, குடியேறிகள் நாடு தான். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னது போல, நானும் ஒரு குடியேறி தான். குடியேறிகளால் வளர்ந்த நாடு தான் அமெரிக்கா. அதனால், அமெரிக்காவில் குடியேறிய, 1.10 கோடி பேரில், 50 லட்சம் பேருக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்துகிறேன். ஏனெனில், பார்லிமென்டில் அதிக இடங்களை பெற்றுள்ள குடியரசு கட்சியினர், என் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். அதனால் தான், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று. கண்மூடித்தனமாக யாருக்கும் குடியேற்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது. தாயை விட்டு குழந்தைகளை பிரிக்கவோ, குடும்பத்திலிருந்து உறுப்பினரை பிரிக்கவோ போவதில்லை. நேர்மையான, நியாயமான, நம்பகத்தன்மை கொண்டவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அடைக்கலம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவானவர்களும், தீய எண்ணம் கொண்டவர்களும் விரட்டியடிக்கப்படுவர். இனிமேல், அத்தகையவர்கள் இங்கு குடியேறாத வண்ணம், தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக, மூன்று அம்ச கொள்கை பின்பற்றப்படும். இவ்வாறு, அதிபர் ஒபாமா பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024