தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நர்சுகள் பணி நியமனம்
கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் 18–ம் தேதியன்று, தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசு ஆணையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், எம்.சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2012–ம் ஆண்டு ஜனவரி 18–ந் தேதி அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்றும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களையும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தலாம் என்றும் தீர்ப்பு கூறியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவ–மாணவியர்கள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் குரியன் ஜோசப் அரசு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்ற நர்சுகள் சார்பாக வக்கீல்கள் என்.ஜி.பிரசாத் மற்றும் சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.
வக்கீல் என்.ஜி.பிரசாத் தன்னுடைய வாதத்தின் போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்ற நர்சுகள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக அரசின் அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு கூட அரசு செவிலியர் கல்லூரிகளில் பயின்றவர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நியமனம் செய்யும் நடைமுறை இருந்தது. எனவே அரசு செவிலியர் கல்லூரிகளில் பயின்றவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அரசாணை செல்லும்
தனியார் நர்சிங் கல்லூரிகளில் பயின்ற நர்சுகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்றவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்றவர்கள் இருவரையும் தமிழக அரசு ஒரே நிலையில் கருதி இருக்கிறது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்து உள்ளது. இப்படி இந்தப் பணியில் அரசு கல்லூரிகளில் பயின்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டால் மற்ற எல்லா பணிகளிலும் இதே அளவுகோல்கள் கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். இது இரு நிலைகளில் உள்ள உரிமைகளில் சமநிலையை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது.,
இதற்கு நீதிபதிகள், எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை பொருத்தவரையில் அவர்கள் அரசு கல்லூரிகளில் படித்தார்களா? அல்லது தனியார் கல்லூரிகளில் படித்தார்களா? என்று பார்ப்பது கிடையாது. அனைவரையும் நாம் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். இருவருக்கும் சமமான வாய்ப்புக்கள் அளிப்பது தான் சரி. இதில் யாருக்கு முக்கியத்துவம் என்பது சரியல்ல. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசு ஆணை சரியானது. அதேபோல் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பும் சரியானதே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment